×

திருச்செங்கோடு கூட்டு குடிநீர் திட்டம் 10 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும்

பள்ளிபாளையம், பிப்.26: திருச்செங்கோடு கூட்டு குடிநீர் திட்டம் இன்னும் 10 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். பள்ளிபாளையம் ஒன்றியம் புதுப்பாளையத்தில் கால்நடை பராமரிப்புத்துறை கோழி அபிவிருத்திட்ட விழா திட்ட இயக்குனர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. விழாவில் பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள், கறவை மாடுகள், ஆடுகள் ஆகியவற்றை அமைச்சர் தங்கமணி வழங்கினார். அப்போது, அவர் பேசியதாவது:தார்சாலை அமைத்தல், வடிகால் வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆலாம்பாளையம், படைவீடு பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கிடும் வகையில் 400 கோடியில் திருச்செங்கோடு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் 10 மாதங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்படும். இந்த திட்டத்தினால் இன்னும் 25 ஆண்டுக்கு குடிநீர் பற்றாக்குறையே ஏற்படாது.

இந்த விழாவில் 5 ஊராட்சிகளைச் சேர்ந்த 700 குடும்பங்களுக்கு ஊரக புறக்கடை கோழிகள் மற்றும் விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் இதை பயன்படுத்தி லாபம் பெற்று பொருளாதார ரீதியாக உயர்ந்திட வேண்டும். பொதுமக்கள் அனைவரும் அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்தி தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.பள்ளிபாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பெரியார் துவாரகா பொது அறிவுத்திறன் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றதை அமைச்சர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். உள்ளாட்சித் துறையின் மூலம் வழங்கப்பட்ட 3 மின்கல குப்பை வாகனங்களை அமைச்சர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் செந்தில், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சுப்பிரமணி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி, புதுப்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் ரவி, முன்னாள் நகர மன்ற தலைவர் வெள்ளியங்கிரி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED எக்ஸல் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா