×

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் பூட்டியே கிடக்கும் சுகாதார நிலையம்

குன்னூர், பிப். 26: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர்.நகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தை அருகில் உள்ள மரப்பாலம், கே.என்.ஆர்.நகர், ஆதிவாசி கிராமங்களான கோழிக்கரை, புதுக்காடு, குறும்பாடி போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாமல் இருந்தது. பொதுமக்களின் தொடர் கோரிக்கையால் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது.

அந்த சமயத்தில் ஆதிவாசி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் நாளடைவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டர் மற்றும் நர்சுகள் வருவது இல்லை என்றும் மாதத்திற்கு ஒரு நாள் மட்டும் முகாம் நடத்துவதோடு சுகாதார நிலையம் திறக்கப்படுவது இல்லை என்றும் புகார் எழுந்துள்ளது. எனவே இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தினசரி திறக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. இது குறித்து சமுக ஆர்வலர்கள் கூறுகையில், கே.என்.ஆர். நகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பெரும்பாலான நாட்களில் திறக்கப்படுவது இல்லை. மாதத்திற்கு ஒரு முறை முகாம் நடத்திவிட்டு சென்று விடுகிறார்கள். இடைபட்ட நாட்களில் உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, கர்ப்பிணி பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ குன்னூர் அல்லது மேட்டுப்பாளையம்தான் செல்ல வேண்டியது உள்ளது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை மலைப்பாதை என்பதால் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. அந்த நேரத்தில் முதலுதவி சிகிச்சை செய்ய இந்த ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து இருந்தால் வசதியாக இருக்கும். பொதுமக்கள் நலன் கருதி கே.என்.ஆர்.நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தினசரி திறந்து டாக்டர் மற்றும் நர்சுகள் பணியில் இருக்க  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Coonoor-Mettupalayam Highway ,
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை பாதிப்பு..!!