×

கோடை காலத்திற்கு முன்பே சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்சும் டேங்கர் லாரிகள்

கூடுவாஞ்சேரி, பிப். 26: கோடை காலம் ெதாடங்குவதற்கு முன்பே சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்சும் டேங்கர் லாரிகள் மீது சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த ஆண்டு கோடை காலத்தில் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தால் சென்னை நகரில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பின்னர், கடந்த பருவமழையால், தமிழகத்தில் உள்ள ஏரி, குளம், குட்டை ஆகியவை நிரம்பி ஓரளவு தண்ணீர் கிடைத்தது. இந்நிலையில், கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாவே, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் அமைந்துள்ள விவசாய கிணறுகளில் சட்டவிரோதமாக டேங்கர் லாரிகளில் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து, மீண்டும் பொதுமக்கள் தண்ணீருக்காக அலைய வேண்டிய நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள், குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரத்துக்கு காலி குடங்களுடன் தண்ணீர் பிடிக்க அலைந்து திரிந்தனர். ஆனால், இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே சிலர், சட்டவிரோதமாக விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கின்றனர்.

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள பகுதிகளில்  திருட்டுத்தனமாக தண்ணீர் உறிஞ்சும்  தொழிலை தொடங்கியுள்ளனர். இதில், பொதுமக்களுக்காக குடிநீர் வழங்குவதாக கூறி விவசாய கிணறு, ஏரி மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் உறிஞ்சப்படும் தண்ணீரை டேங்கர் லாரிகளில் பிடித்து சென்று, தனியார் ஓட்டல்கள், நிறுவனங்கள், செங்கல் சூளை, எம் சாண்ட், ஹாலோ பிளாக், ஷாலிட் கற்கள் மற்றும் சிமென்ட் கற்கள் தயாரிக்க ஒரு லோடு தண்ணீரை ₹10 ஆயிரத்திற்கு மேல் விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் உள்ள விவசாய கிணறுகள் மட்டுமின்றி பல இடங்களில் சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சி எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல் டேங்கர் லாரிகளில் தண்ணீர் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்லும் டிரைவர்கள், எந்நேரமும் குடிபோதையில் லாரிகளை ஓட்டுகின்றனர். இதனால், சாலையில் நடமாட முடியாமல் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் அச்சத்துடன் வாழ்கிறோம்.

மேலும், திருட்டுத்தனமாக தண்ணீரை ஏற்றி கொண்டு அதிவேகமாக செல்லும் லாரிகளால் குமிழி கிராமத்தில் இருந்து மேலகோட்டையூர் செல்லும் சாலையும், வேங்கடமங்கலத்தில் இருந்து கண்டிகை வரையும் ஊனமாஞ்சேரியில் இருந்து கொளப்பாக்கம் வரையும், வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனை தட்டி கேட்பவர்களை ரவுடிகள் மற்றும் அரசியல் பிரமுகர்  வைத்து தண்ணீர் திருடும் கும்பல் மிரட்டுகின்றனர். எனவே, கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் இருக்க, சட்டவிரோதமாக விவசாய கிணறுகளில் தண்ணீர் உறிஞ்சும், டேங்கர் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...