×

நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து

காஞ்சிபுரம், பிப்.26: காஞ்சிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும்  புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காஞ்சிபுரத்தை அடுத்த நத்தப்பேட்டையில் காஞ்சிபுரம் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், சினிமா தியேட்டர் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையை, இங்கு மலை போல் குவித்து வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அந்த நேரத்தில், காற்று வேகமாக வீசியதால், கிடங்கு முழுவதும் தீ மளமளவென பரவி, அப்பகுதியில் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது.

இதையொட்டி, சுற்று பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு, மூச்சு திணறல் ஏற்பட்டு கடும் அவதியடைந்தனர்.
தகவலறிந்து காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனால், தீயணைப்பு வாகனத்தில் கொண்டு வந்த தண்ணீர் காலியாகிவிட்டது. பின்னர் மீண்டும் தண்ணீர் கொண்டு வந்து பல மணி நேர்ம கடுமையான போராட்டத்துக்கு பிறகு குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைத்து, இரவு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Tags : fire ,garbage warehouse ,
× RELATED கொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு