×

சென்னை மக்களுக்கு வழங்குவதுபோல் புறநகரில் வசிக்கும் முதியோர்களுக்கு இதுவரை கிடைக்காத இலவச பஸ் பாஸ்

திருப்போரூர், பிப்.26:   சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் முதியோர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது இல்லாமல் உள்ளது. இதனை மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த 2011 - 2016ம் ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் பயன்பெறும் வகையில் மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்குவதாக அறிவித்தார். அதன்படி, அந்த திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்த இலவச பஸ் பாசை பயன்படுத்தி ஏராளமானோர் மாநகர பஸ்களில் பயணம் செய்ததால் மாநகர போக்குவரத்து கழகத்துக்கு கணிசமான இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த 2017ம் ஆண்டு இத்திட்டத்தை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பலை ஏற்பட்டது. இதனால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக சென்னை மாநகர அஞ்சல் குறியீடு உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் முதியோர் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த திட்டத்தில், கிராமப்புற முதியோர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சிறுசேரி, தாழம்பூர், நாவலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்னை அஞ்சல் குறியீடு எண் 600130 வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அஞ்சல் குறியீடு எண் உள்ள முகவரியில் வசிப்பவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இதனை ஒட்டியுள்ள ஏகாட்டூர், படூர், வாணியஞ்சாவடி, புதுப்பாக்கம், கேளம்பாக்கம், திருப்போரூர், தையூர், ஆலத்தூர், செம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு செங்கல்பட்டு மாவட்ட அஞ்சல் குறியீட்டு எண் (603110, 603103, 603108)  வழங்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சல் குறியீட்டு எண் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த குறியீட்டு எண்ணை வைத்து மாநில அரசின் மூத்த குடி மக்களுக்கான ஒரு திட்டத்தை நிராகரிப்பது ஏற்புடையதாக இல்லை. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாத்திடம் முறையிட்டாலும், அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மாநகர போக்குவரத்து கழகம் செங்கல்பட்டு, மாமல்லபுரம், திருப்போரூர் உள்பட புறநகரை தாண்டிய பகுதிகளுக்கும் பஸ்களை இயக்குகிறது. அதன்படி அதன் சலுகைகளும் அப்பகுதி மக்களை சென்றடைய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே, மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் சென்னை நகர மக்களுக்கு வழங்குவதுபோல், சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் முதியோர்களுக்கும், இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். இல்லாவிட்டால், செங்கல்பட்டு மாவட்டம் வரை சென்னை அஞ்சல் குறியீட்டு எண்ணை வழங்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

Tags : Chennai ,suburbs ,
× RELATED சசிகலா ஒரு வெற்று பேப்பர்: ஜெயக்குமார் கிண்டல்