×

காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் திருத்தேர் உற்சவம்

காஞ்சிபுரம், பிப்.26: காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் நேற்று நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் கடந்த 19ம் தேதி மாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவ பெருமாள் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திரபிரபை உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதையொட்டி, விழாவின் 3ம் நாளான 21 ஆம் தேதி கருடசேவை உற்சவமும், 7ம் நாளான நேற்று திருத்தேர் உற்சவமும் நடந்தது. இதில், உற்சவர் விஜயராகவ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திருப்புட்குழி, பாலுசெட்டிச்சத்திரம், முசரவாக்கம், தாமல் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை கோயில் செயல் அலுவலர் தியாகராஜன், மற்றும் கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்தனர்.

Tags : Thiruppudkuzhi Vijayaraghava Perumal Temple ,Kanchipuram ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...