×

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் ெசயல்படுத்தப்படுமா?

புதுக்கோட்டை, பிப்.26: புதுக்கோட்டை மாவட்டம் பெரும் விவசாய நிலங்களை கொண்ட பகுதியாகும். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்புவரை செழிப்பான காடுகளைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டம், பருவமழை பொய்த்து பெரும் பின்னடைவைச் சந்தித்தது. பூமியில் அதிக சூட்டை ஏற்படுத்தும் தைல மரக்காடுகள் ஒரு வகையில் இந்த வறட்சிக்கு காரணமானதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில்அண்மையில் பெய்த மழை மாவட்டத்தில் பெரும்பாலான கண்மாய்களை நிறைத்திருக்கிறது.தமிழக அரசின் குடிமராமத்துத் திட்டத்தில் 882 பணிகள் ரூ. 43 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன. இவையெல்லாம் சேர்ந்து மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.71 மீட்டர் உயர்ந்துள்ளதாக பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது. இருப்பினும் கோடை தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஏப்ரல், மே மாதங்கள் எப்படிஇருக்கும் என்று கணிக்க முடியாத நிலையில் கண்மாய்களில் கிடக்கும் தண்ணீர் எந்தளவுக்கு தாக்குப்பிடிக்கும் எனத் தெரியவில்லை. இந்த நிலையில் அடுத்த மழைக்கு முன்பாக குறிப்பாக 3, 4 மாதங்களுக்குள் -மாவட்டம் முழுவதும் மீண்டும் நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகளைத் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த காலங்களில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.அதாவது ஏற்கனவே ஆழ்குழாய்க் கிணறு அமைக்கப்பட்டு தண்ணீரின்றி வறண்டு போனவற்றை கவனமாகத் தேர்ந்தெடுத்தும், கண்மாய்களின் ஒரு பகுதித் தேர்வு செய்தும் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆழ்குழாய்க் கிணறு இல்லாத நீர்நிலைகளில் கிணறு அமைக்கப்பட்டது. சுற்றிலும் மண் மூடிவிடாமல் இருக்கும் வகையில் சிமெண்ட் கட்டை அமைக்கப்பட்டு, ஜல்லிக்கற்கள் நிரப்பப்பட்டன. சராசரியாக ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை செலவிடப்பட்டது. இப்போது இத்திட்டத்தை முறையாக சில நூறு இடங்களில் செயல்படுத்தினால் அடுத்த மழையின்போது மேலும் நிலத்துக்குள் நீரைச் செலுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம். தற்போது ஊரக உள்ளாட்சி அமைப்புகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இதுபோன்றபணிகள் மக்கள் பிரதிநிதிகளின் கூடுதல் அக்கறை மற்றும் கண்காணிப்புடன் செயல்படுத்த முடியும். மாவட்ட நிர்வாகம் இப்போதே இதற்கான பணியைத் தொடங்க வேண்டும் என்றனர்.

Tags : wells ,Pudukottai District ,
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்