×

நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளுக்கு முறையான பாதுகாப்பில்லை

கும்பகோணம், பிப். 26: கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் பாதுகாப்பாற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் பனியால் நெல் மூட்டைகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே படுதா போட்டு மூடி பாதுகாப்புடன் வைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் உள்ளிட்ட மூன்று தாலுகாவில் 4 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் சாகுபடி நடந்தது. இதற்காக கடந்த அக்டோபர் மாதம் சாகுபடி செய்யப்பட்டு தற்போது நெல் விளைச்சலாகி அறுவடைக்கு தயாராகியுள்ளது. சில இடங்களில் சம்பா பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது.
அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசிடம் விற்பனை செய்வதற்காக தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 443 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. இதில் 6 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 2.88 லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து நெல் கொள்முதல் நிலையத்திலும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து அடுக்கி வைத்துள்ளனர். ஆனால் கும்பகோணம் அடுத்த சோழன்மாளிகை கிராமம் மற்றும் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை படுதா போட்டு மூடாமலும், பாதுகாப்புக்கு எந்த விதமான நடவடிக்கையும் இல்லாமல் சாலையோரத்தில் வைத்துள்ளனர். கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே நெல் மூட்டைகள் பனியில் நனைந்தால் நெல்கள் ஈரமாகிவிடும். சில நேரங்களில் நாற்றுகள் முளைக்கும் அபாயமும் ஏற்படும். இந்த நெல்களை அரவையில் அரைக்கும்போது அரிசிகள் உடைந்து குருணையாகியும், தரமற்ற அரிசியாகவும் மாறிவிடும். இதனால் அரிசி மூட்டைகள் விலை போகாமல் குப்பைகளில் கொட்டும் நிலை உருவாகும்.

மேலும் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்காததால் சாலையோரத்தில் இருக்கும் நெல் மூட்டைகளை மர்மநபர்கள் திருடி சென்றால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதேபோன்று தற்போது திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்காமல் அலட்சியமாக வைத்திருப்பதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கும் போதுமான அளவில் படுதாவை வழங்கி பாதுகாப்புக்கு ஆட்களை நியமித்து நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : The Corporation ,purchasing centers ,
× RELATED வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...