×

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் பயணிகள் தவிப்பு

தஞ்சை, பிப். 26: தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகி தவித்து வருகின்றனர். எனவே அடிப்படை வசதி செய்து கொடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாநகரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்த கட்டுமானங்கள் அகற்றப்பட்டன. மேலும் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து கொடிமரத்துமூலை அருகே தற்காலிக பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து நகர பேருந்துகள் இயங்கும் வகையில் மாற்று திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையங்கள் வழியாக ஒரத்தநாடு, புதிய பேருந்து நிலையம், மருத்துவக்கல்லூரி, மாரியம்மன் கோயில் போன்ற நகரை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.தஞ்சை மாநகரின் மைய பகுதி பழைய பேருந்து நிலையம் என்பதால் மக்கள் கூட்டம் இப்பகுதியில் அதிகளவில் உள்ளது. இங்குள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், வணிக நிறுவனங்களை நாடி வரும் பொதுமக்கள் பின்பு தங்கள் வீடுகளுக்கு செல்ல பழைய பேருந்து நிலையத்தின் சாலையோரம் நின்று பேருந்துகளில் ஏறி செல்கின்றனர்.

மேலும் கும்பகோணம், அரியலூர், சென்னை ஆகிய ஊர்களிலிருந்து வரும் பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு செல்கின்றன. இதனால் பழைய பேருந்து நிலையத்தின் வெளியே எப்போதும் நூற்றுக்கணக்கான பயணிகள் நின்று பேருந்துகளில் ஏறி செல்கின்றனர். ஆனால் அவர்கள் நிற்பதற்கு நிழற்குடை இல்லை. தற்போது கோடை வெயில் துவங்கியுள்ள நிலையில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடனடியாக இங்கு தற்காலிகமாக நிழற்குடை அமைக்க வேண்டும். மேலும் முதியோர், குழந்தைகள், பெண்கள், நோயாளிகள் அமரும் வசதி இல்லை. சாலையோரம் நின்று பேருந்து ஏற வேண்டியுள்ளதால் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அத்துடன் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இப்பகுதியில் கழிவறை வசதியில்லை. ஏற்கனவே பேருந்து நிலையத்தில் இருந்த கழிவறைகள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு விட்டது. கட்டண கழிவறை கூட இங்கு இல்லை. பழைய பேருந்து நிலையத்தை சுற்றி எங்கும் இலவச கழிவறையோ, கட்டண கழிவறையோ இல்லை. ராஜப்பா பூங்காவில் இருந்த கழிவறையும் தற்போது இடிக்கப்பட்டு விட்டது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செந்தில்குமார் கூறும்போது, மாநகராட்சியாக உருமாறும் தஞ்சையில் தற்காலிகமாக பயணிகளுக்கு உரிய வசதி செய்து தர வேண்டும் என்ற கடமை மாநகராட்சி நிர்வாகத்திற்கு இல்லையா. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பேருந்துகளில் ஏறி, இறங்கும் இப்பகுதியில் குடிநீர், கழிவறை மற்றும் அமர நாற்காலி வசதி, நிழற்குடை வசதி செய்து தர வேண்டும். உடனடியாக மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Passengers ,facilities ,Tanjore Old Bus Stand ,
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...