×

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பலத்த காற்றுக்கு சாய்ந்த உயர் கோபுர மின்விளக்கு

திருவாரூர், பிப்.26: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் 3ம் பிரகாரத்தில் இருந்து வந்த உயர்கோபுர மின்விளக்கினை மீண்டும் அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது. சைவசமயத்தின் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும், அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டு விழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 11ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆழித்தேரோட்டம் மற்றும் தெப்ப திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது மட்டுமின்றி சாதாரணமாகவே தினந்தோறும் உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் காலை, மாலை என ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். உள்ளூர் பக்தர்கள் அதிகாலை 5.30 மணி அளவிலேயே தியாகராஜ பெருமானை தரிசிப்பதற்காக இக்கோயிலுக்கு வருவது வாடிக்கை. மேலும் பணிக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் மாலை 6 முதல் இரவு 9 மணி வரையில் இந்த கோயிலில் இருந்து வரும் தியாகராஜசுவாமி மற்றும் கமலாம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்யும் நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் இக்கோயிலின் 3ம் பிரகாரத்தில் இருந்து வந்த உயர் கோபுர மின்விளக்கு ஒன்று கடந்த 2 வருடத்திற்கு முன்னர் பலமாக வீசிய காற்று ஒன்றில் திடீரென அடியோடு சாய்ந்தது. தற்போது வரை இந்த மின்விளக்கு கோபுரம் அமைக்கப்படாததால் பிரகாரங்கள் முழுவதும் இருளில் மூழ்கும் நிலை இருந்து வருகிறது.  இதனால் இந்த உயர்கோபுர மின்விளக்கினை மீண்டும் அமைக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : tower ,Thiruvarur Thyagaraja Swamy Temple ,
× RELATED என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால்...