×

மன்னார்குடி அருகே அரசு விதை பண்ணைகளில் கலெக்டர் அதிரடி ஆய்வு சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்

மன்னார்குடி, பிப்.26: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காஞ்சிகுடிக்காடு, மேலநாகை, கீழநாகை ஆகிய பகுதிகளில் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் உளுந்து, பயறு, கத்தரி, பாகற்காய் சாகுபடி முறைகள் மற்றும் அரசு விதைப் பண்ணையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மன்னார்குடி அருகே காஞ்சிக்குடிக்காடு அரசு விதைப் பண்ணையில் சொட்டு நீர் பாசன முறையில் விசைத் தெளிப்பான் மூலம் உளுந்து, பச்சைப்பயிறு, எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டு, சாகுபடி செய்யப் பட்டுள்ள பரப்பளவு விபரங்கள் மற்றும் விசைத் தெளிப்பான் கையிருப்பு உள்ளிட்டவைகள் குறித்து வேளாண்மைத்துறை இணை இயக்கு னரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து விதை சுத்திகரிப்பு நிலையத்தை பார்வை யிட்டு விதை சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள் மற்றும் விதை சான்று வழங்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் நெடுவாக்கோட்டை ஊராட்சி மேலநாகை கிராமத்தில் தோட்டக் கலைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்த திட்டத்தின் கீழ் விவசாயி ஒருவர் ரூ.40 ஆயிரம் அரசு மானியத்துடன் கத்தரிக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளதை கலெக்டர் பார்வையிட்டு விவசாயிகளிடம் சாகுபடி முறைகள் மற்றும் திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பில் 50 சதவீதம் அரசு மானியத்தில் நிழல் வலையில் மிளகாய் நாற்றங்கால் சாகுபடி செய்யப் பட்டுள்ளதையும், கீழநாகை கிராமத்தில் நீர் வள நிலவள திட்டத்தின் கீழ் ரூ.52,800 அரசு மானியத்தில் கொய்யா சாகுபடி செய்ய பட்டுள்ளதையும் பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் ஆனந்த் விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வில் ஆர்டிஓ புண்ணியக்கோட்டி, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சிவக்குமார், தோட்டக்கலை துறை துணை இயக்குநர் சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மைத் துறை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா, விதை சான்று உதவி இயக்குநர் ஜெயசீலன், தோட்டக்கலை அலுவலர் சூர்யா, உதவி அலுவலர்கள் தினேஷ் பாபு, பாலசுந்தரம், விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : collector ,State Seed Farms ,Mannargudi ,
× RELATED திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக...