×

முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காட்டில் பேரூராட்சி குப்பை கிடங்கில் தொடர் தீவிபத்து

முத்துப்பேட்டை, பிப்.26: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு கிராம எல்லை பகுதியில் பேரூராட்சி குப்பைக் கிடங்கு பல ஆண்டுகளாக உள்ளது. இங்கு சமீபத்தில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தில் குப்பைகளை தரம்பிரித்து மறுசுழற்சி பயன்பாட்டிற்காக சுமார் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் 3 தகர ஷெட்டுகள் அமைக்கப்பட்டன.ஏற்கனவே அமைக்கப்பட்ட 2 ஷெட்டுகள் பயன்பாடின்றி குப்பை மண்டியாக மாறி உள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு ஷெட் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு வந்தநிலையில், திட்டப்பணிகள் ஏனோ பாதியிலேயே நிறுத்தப்பட்டன. அதற்காக வரவழைக்கப்பட்ட மிஷின் உள்ளிட்ட உபகரணங்கள், தளவாட பொருட்கள் ஆகியனவும், ஏற்கனவே பணியில் இருந்த அலுவலர்களின் அலட்சியத்தால் பேரூராட்சி வளாகத்தில் ஓரங்கட்டப்பட்டது. இதனால் பாதியில் விடப்பட்ட ஷெட்டுகளிலும் தற்போது குப்பையை குவித்து வைத்துள்ள பேரூராட்சி நிர்வாகம் அரசின் திட்ட நோக்கத்தை நிறைவேற்றாமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை பொடித்து தூளாக்கும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மிஷினும் பயனின்றி உள்ளது.இந்நிலையில் சமீபத்தில் பொறுப்பேற்ற முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் தேவராஜின் குப்பைகளை சாலையில் கொட்டினால் அபராதம் என அதிரடி உத்தரவால் டிராக்டர்கள், மினிவேன்கள், பேட்டரி வண்டிகள் ஆகியன வாயிலாக மார்க்கெட் பகுதி குப்பைகள், குடியிருப்புகள், ஓட்டல் கழிவுகள் உள்ளிட்டவை சேகரிக்கப்படுகிறது. இதில் மக்கும் தன்மை உடைய கழிவுகளை ஒரு வகையாக பிரிக்க வேண்டும். மறுசுழற்சிக்கு தேவைப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குகளை தனித்தனியாக பிரிக்க வேண்டும். ஆனால் இங்கு தரம் பிரித்து சேமிக்க போதுமான இடம் இல்லாததால் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் சுகாதாரம், தூய்மை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் பொறுப்புள்ள பணியாளர்கள் குப்பை மேலாண்மை மற்றும் முழுச்சுகாதார பணிகளை கண்டுகொள்வதில்லை. மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை என குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளையும் மேற்கொள்வதில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சமீபகாலமாக பேரூராட்சி துப்புரவு பணியாளர்களால் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளில் தாவரக் கழிவுகள், மரம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், கந்தல் துணிகள், காகிதங்கள், ரப்பர் மற்றும் தோல்பொருட்கள் ஆகியன கலந்து, வாகனங்களில் கொண்டு வரப்பட்டு இந்த குப்பை கிடங்குப்பக்கம் வந்து சேரும்போது ஏற்கனவே குப்பை கிடங்கில் மலைபோல் குவிந்து கிடப்பதால் சாலையோரமே கொட்டி நிரவி வைத்துள்ளனர். இதனால் குப்பைகளின் ஈரப்பதம், அதில் சிதையக்கூடிய பொருட்களின் அளவு, கரிமங்கள், நைட்ரஐன், பாஸ்பரஸ், பொட்டாசியம் குறித்த ஆய்வுகளும் இங்கு மேற்கொள்ளபடவில்லை. குடியிருப்புகள், கடைத்தெரு வணிகப்பகுதிகள், பள்ளிகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றிலிருந்து வீசியெறியப்படும் குப்பைகள் அனைத்துமே கிடங்கின் வெளியிலேயே குவிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் இப்பகுதியில் துர்நாற்றமும், ஈ கொசுக்கள் பெருக்கமும் அதிகரித்து, நோய்த்தொற்றை பரப்பும் களமாக குப்பைக்கிடங்கு மாறியுள்ளதாகவும் இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமின்றி இதனை கடந்து செல்பவர்களுக்கு கூட பல்வேறு வியாதிகள் பரவி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நிலைமை இப்படி இருக்க இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி சில விஷமிகளின் சதித்திட்டத்தாலும், எதார்ச்சையாகவும் தீவிபத்துகள் ஏற்பட்டு இப்பகுதி மக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த குப்பைக் கிடங்கில் திடீரென தீப்பற்றியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் பலமணிநேரம் போராடி நள்ளிரவில் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இன்னும் புகை வெளியேறிக்கொண்டிருகிறது. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக, துர்நாற்றமும் வீசுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கிடங்கு முழுவதும் பரவி எரிந்து எழுந்த தீ அதேவழியாக செல்லும் மின்கம்பியை தொட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் நகர் முழுவதும் பலமணிநேரம் மின் தடை ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், தற்பொழுது உள்ள பேரூராட்சி மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பினால் இந்த குப்பை கிடங்கு போதுமானது கிடையாது. அதனால் குப்பைகள் இந்த கிடங்கில் அதிகளவில் சேருகிறது என்பது உண்மைதான். அதேநேரத்தில் இப்பகுதியில் இந்த குப்பை கிடங்கினால் மிகப்பெரிய சுகாதார சீர்க்கேடு ஏற்பட்டுள்ளதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்? சமீபத்தில் பேரூராட்சி சார்பில் மங்கள் ஏரி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள ஒரு இடத்தை கண்டுபிடித்து அங்கு குப்பை கிடங்கு அமைக்க பரிந்துரைக்கு அனுப்பிய பிறகு அதனை வருவாய்த்துறை அதிகாரிகள் மட்டத்தில் அலச்சியம் காட்டி வருவதாக தெரிகிறது. இதில் மாவட்ட கலெக்டர் அந்த இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேநேரத்தில் இங்கு அடிக்கடி ஏற்படும் தீ விபத்தையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : fires ,barracks ,Muthupettu ,Alangadi ,
× RELATED 2 கட்டுமான நிறுவன அதிபர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை