திருச்சியில் 2 ஆண்டுக்கு முன் நடந்த சம்பவம் தம்பதியை வெட்டி கொன்று நகை, பணம் கொள்ளையில் இருவர் சிக்கியது எப்படி?

திருச்சி, பிப். 26: திருச்சி அருகே தம்பதியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 2 ஆண்டுக்கு பின் இருவர் பிடிபட்டனர். இவர்களுக்கு மேலும் ஒரு கொலையில் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(39), விவசாயி. இவரது மனைவி லதா(32). இவர்கள் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக உள்ள வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 2018 ஏப்ரல் மாதம் வீட்டுக்கு வெளியே கணவன், மனைவி இருவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் தம்பதியை அரிவாளால் வெட்டிவிட்டு, வீடு புகுந்து பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.3000 ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். போகும்போது ரமேஷின் பைக்கையும் எடுத்துச்சென்று விட்டனர். கொள்ளையர்கள் வெட்டியதில், லதா சம்பவ இடத்திலேயே இறந்தார். ரமேஷ் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அப்போது பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தம்பதியை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்தது பெரம்பலூர் மாவட்டம் தெற்கு சத்திரமனையை சேர்ந்த கிஷாந்த் (21), அவரது நண்பர் திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள வாழையூரை சேர்ந்த பழனிச்சாமி (21) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். 2 பேரையும் நேற்று திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எஸ்பி., பரபரப்பு தகவல்: குற்றவாளிகள் சிக்கியது எப்படி என திருச்சி மாவட்ட எஸ்பி ஜியாவுல்ஹக் கூறுகையில், கடலூரில் சில தினங்களுக்கு முன் ஒரு பைக் விபத்தில் சிக்கியது. அந்த பைக் ரமேஷை கொலை செய்துவிட்டு அவரது வீட்டில் இருந்து கொள்ளையர் எடுத்துச்சென்ற பைக் என்பது தெரியவந்தது. தகவல் கிடைத்ததும் டிஎஸ்பி ராஜசேகரன் தலைமையிலான தனிப்படையினர் சென்று விசாரித்ததில், விபத்தில் சிக்கிய பைக்கை, ஓட்டி வந்தது கிஷாந்த் என்பது தெரியவந்தது. இவர் ரமேஷ், லதா தம்பதிய கொன்றவர்களில் ஒருவர். எனவே அவரை திருச்சிக்கு அழைத்து வந்து விசாரித்தோம். இதில் தனது நண்பர் பழனிச்சாமியுடன் இணைந்து கணவன், மனைவியை கொன்று நகை, பணம், பைக்கை திருடிச்சென்றதை ஒப்புக்கொண்டார்.

மேலும் கடந்த 2017 டிசம்பரில் பழனிசாமிக்கும், அவரது தம்பி பெருமாளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் கிஷாந்த்தும், பழனிசாமியும் சேர்ந்து பெருமாளை சிறுகனூரில் உள்ள வனப்பகுதிக்கு அழைத்து சென்று கை, கால்களை கட்டி ஏரியில் தள்ளி விட்டு கொலை செய்துள்ளனர். சில நாட்களுக்கு பின் பெருமாளின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இந்த கொலையையும் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்றார். எஸ்பி மேலும் கூறுகையில், நம்பர் 1 டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். பெல் கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளையில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பா என்றும் விசாரிக்கப்படுகிறது. எங்களது விசாரணை வளையத்தில் யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுவதில்லை. 2 ஆண்டுக்கு முன் கணவன், மனைவி கொல்லப்பட்ட வழக்கில் இப்போது குற்றவாளிகள் பிடிபட்டிருப்பது போல், பெல் வங்கி கொள்ளையிலும் ஏதேனும் துப்பு கிடைக்கும். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றார்.தம்பதி கொலை வழக்கில் 2 ஆண்டுக்கு பின் குற்றவாளிகளை பிடித்த டிஎஸ்பி ராஜசேகரன் தலைமையிலான தனிப்படைக்கு, எஸ்பி வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Related Stories:

>