நரிக்குடி அருகே வி.கரிசல்குளத்தில் ரேஷன் கடையை முற்றுகையிட்ட கிராமமக்கள்

திருச்சுழி, பிப். 26: நரிக்குடி அருகே ஆற்றல் பெண்கள் கூட்டமைப்பு மூலம் இயங்கி வரும் ரேஷன் கடையை மாற்றி மீண்டும் கூட்டுறவு கடன் வங்கியின் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நரிக்குடி அருகே உள்ள வி.கரிசல்குளத்தில் கூட்டுறவு வேளாண்மை முழுநேர கடை இயங்கி வருகிறது. இக்கடையின் மூலம் வி.கரிசல்குளம், தச்சனேந்தல், தாமரைக்குளம் உட்பட பத்து கிராமங்களை சேர்ந்த சுமார் 1190 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 18 ஆண்டுகளாக ஆற்றல் பெண்கள் கூட்டமைப்பு மூலம் இக்கடை இயங்கி வந்த நிலையில், பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை எனவும், பொங்கல் சிறப்பு பரிசாக வழங்கப்படும் பணம் மற்றும் பொருட்கள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை எனவும், பத்து கிராமங்களில் பத்து நாட்கள் விநியோகம் செய்துவிட்டு மீதியுள்ள பொருட்களை வெளி சந்தையிலும், விடுதிக்கும் விற்பனை செய்து விடுவதாகவும், மேலும் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளதால் புகார் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்காமல் இருந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக ஆற்றல் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அதிகளவில் முறைகேடு செய்துள்ளதாக புகார் கூறியுள்ளனர்.

இது சம்மந்தமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததன்பேரில் ஆற்றல் பெண்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ரேஷன் கடையை நடத்துவதற்கு தடை விதித்து கூட்டுறவு துறையிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆற்றல் பெண்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் ரேஷன் கடை நடத்துவதற்கு இடைக்கால  உத்தரவு வாங்கி வந்த நிலையில், கிராம மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆற்றல் பெண்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ரேஷன் கடையை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் ரேஷன் கடைக்கு பூட்டு போட்டனர்.  மீண்டும் நேற்று காலையில் ரேஷன் பொருட்கள் வழங்க வந்த ஊழியர்களை கிராமமக்கள் சிறைபிடித்தனர்.

இதனையறிந்த திருச்சுழி தாசில்தார் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி நீதிமன்ற உத்தரவை மதித்து ரேஷன் கடையை திறப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பேச்சுவார்த்தையில் ஆற்றல் பெண்கள் கூட்டமைப்பு சார்ந்தவர்கள் இக்கடையை மீண்டும் இயக்கினால் முறைகேடு ஏற்படும் எனக்கூறி ரேஷன் கடை முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தினர். தாசில்தார் ரவிச்சந்திரன் பெண்கள் கூட்டமைப்பு நடத்துவதற்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்ய எதிர்ப்பு இருப்பதால் மறு உத்தரவு வரும் வரை நடத்த அனுமதிக்க இயலாது என கூறியபின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: