×

திண்டுக்கல், பழநியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், பிப். 26: நீண்டநாள் கோரிக்கைகளின் மீது விரைவில் தீர்வு காண கோரி திண்டுக்கல், பழநியில் வருவாய்த்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடலூர் வருவாய்த்துறை அலுவலர்கள் மீது மாவட்ட கலெக்டர் எடுத்து வரும் ஊழியர் விரோதபோக்கு, பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்திட வேண்டும் மேலும் நடைமுறைகளை தொடர்ந்து மீறி வரும் கலெக்டர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களின் நீண்டநாள் கோரிக்கைகளின் மீது விரைவில் தீர்வு காண வருவாய்த்துறை- பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 81 ஆதிதிராவிடர் நலம் தனி வட்டாட்சியர் பணியிடங்களை கலைப்பதற்கான நடவடிக்கையினை ஆதிதிராவிடர் நலத்துறை உடனடியாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உணவு இடைவேளையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்ட தலைவர் ஜான் பாஸ்டின் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுகந்தி கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாநிலத் துணை தலைவர் மங்கள பாண்டியன் ஆர்ப்பாட்ட விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட பொருளாளர் பாபு நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதேபோல் பழநி யூனியன் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags : protest ,Revenue Officers Association ,Dindigul ,Palani ,
× RELATED அனுஷ்கா எதிர்ப்பை மீறி இணையதளத்தில் வெளியாகும் நிசப்தம்