×

வத்தலக்குண்டுவை கலக்கிய கொள்ளையன் கைது 27 பவுன் நகைகள் பறிமுதல்

வத்தலக்குண்டு, பிப். 26: வத்தலக்குண்டு பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் கைது செய்து, 27 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். வத்தலக்குண்டு பஸ்நிறுத்தத்தில் நேற்று முன்தினம் கட்டக்காமன்பட்டியை சேர்ந்த மணிமுருகன் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர், இவரிடம் விலாசம் கேட்பது போல் சென்று கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினார். மணிமுருகன் பணம் தர மறுக்கவே அந்நபர் அவரது சட்டை பையில் இருந்த ரூ.300 பணத்தை பறித்து கொண்டு ஓடினார். மணிமுருகன் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் விரட்டி சென்று அந்நபரை பிடித்து வத்தலக்குண்டு போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள பாப்பனூரை சேர்ந்த குட்டையன் என்ற கோவிந்தராஜ் (38) என்பது தெரிந்தது. மேலும் வத்தலக்குண்டு பஸ்சில் வந்த கோயம்புத்தூரை சேர்ந்த சுப்புராஜ் என்பவரிடம் 20 பவுன் நகைகளை கொள்ளையடித்ததும், வத்தலக்குண்டு திருநகரை சேர்ந்த சுந்தரவடிவேல் என்பவரது வீட்டில் கடந்த ஜன.11ம் தேதி 7 பவுன் நகைகளை கொள்ளையடித்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் கோவிந்தராஜை கைது செய்து, அவரிடமிருந்த 27 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் கோவிந்தராஜை நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான கோவிந்தராஜ் கூட்ட கும்பல், பஸ்களில் இருப்பவர்களிடம் பேண்ட் பாக்கெட்டில் உள்ள பர்சை திருடுவதை வழக்கமாக கொண்டிருந்ததும், தற்போது வத்தலக்குண்டு பகுதியில் திருடிய பணத்தை கொடைக்கானல் சென்று ஜாலியாக இருந்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags : robbers ,Wattala ,
× RELATED பட்டாக்கத்தியுடன் திரிந்த 2 ரவுடிகள் கைது