×

பெருவழிகடவு பகுதியில் பன்றி பண்ணை கழிவுகள் பரளியாற்றில் கலப்பு நோய்கள் பரவும் அபாயம்

குலசேகரம்,பிப்.26: குமரி மாவட்டம் சென்னைக்கு அடுத்ததாக மக்கள் அடர்த்தியான மாவட்டம் ஆகும்.  சென்னையை போன்று இங்கும் கழிவுகள் வடிகால்களில் விடப்பட்டு அவை நீர்நிலைகளில் சென்று கலக்கிறது. பெரும்பாலான பாசன கால்வாய்களிலும் கழிவுநீர் கலப்பதாலும், கழிவுகள் கொட்டப்படுவதாலும்  மாசுபட்டு வருகிறது. இதற்கு அரசு சரியான விதிமுறைகளை வகுத்து நடவடிக்கையெடுக்காததால் யாரும் கண்டுகொள்ளவில்லை. மலைகளிலிருந்து உற்பத்தியாகி வரும் நதிகளில் வரும் தண்ணீர் இதே போன்ற அசுத்தங்கள் இன்றி சுத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடம் உள்ளது. இதனால் குமரிமாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்து உற்பத்தியாகும் கோதையாறு, பரளியாறு போன்றவற்றில் பல்வேறு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது  பரளியாற்றில் கழிவுகள் கலந்து மாசடைந்து வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் பரளியாற்றின் குறுக்கே பெருஞ்சாணியில் அணை கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து புத்தன் அணை வழியாக பாய்ந்து செல்லும் பரளியாறு பெருவழிகடவு, பொன்மனை, வலியாற்றுமுகம், மலவிளை, மாத்தூர் தொட்டிபாலம், திருவட்டார், ஆற்றூர் வழியாக பாய்ந்து மூவாற்றுமுகம் பகுதியில் கோதையாற்றுடன் இணைந்து தாமிரபரணியாக செல்கிறது.பெருஞ்சாணியில் துவங்கி கடலில் சேரும் இடம் வரையிலும் ஏராளமான இடங்களில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பரளியாறு பாய்ந்து செல்லும் பெருவழிகடவு பகுதி, ரப்பர் எஸ்டேட்கள் சூழ்ந்த பகுதி ஆகும். மக்கள் நெருக்கம் குறைவு. இங்கு பரளியாற்றின் கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் 6 இடங்களில் தனியாரால் பெரிய அளவிலான பன்றி பண்ணைகள் நடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் பன்றி இறைச்சிக்கு மவுசு அதிகம் என்பதால் இந்த பண்ணைகளில் ஏராளமான பன்றிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பன்றிகளின் உணவிற்காக குமரி, கேரளா எல்லையோரமுள்ள பிராய்லர் கடைகளிலிருந்து கோழி கழிவுகளும், ஓட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்களிலிருந்து எச்சில் இலை மற்றும் உணவு கழிவுகளும் கொண்டு வந்து குவித்து, பன்றிகளுக்கு உணவாக வழங்குகின்றனர்.பன்றிகளின் கழிவுகளை சேகரித்து, பின்னர் அவற்றை ஜே.சி.பி உதவியுடன் டெம்போக்களில் ஏற்றி சானல்கரை பகுதிகளிலுள்ள சாலையோரம் குவித்து வைத்துள்ளனர். மழைகாலத்தில் இவை தண்ணீரால் கால்வாய்க்குள் அடித்து செல்லப்படுகிறது. பன்றி பண்ணைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நேராக பரளியாற்றுக்கு  வாய்கால்கள் வெட்டப்பட்டு  விடப்படுகிறது.மழைகாலங்களில் மொத்தமாக கழிவுகள் அனைத்தையும் பரளியாற்றில் விடுகின்றனர். இதனால் பரளியாற்றின் இந்த பகுதி முழுவதும் பன்றி பண்ணைகளிலிருந்து வரும் கழிவுநீர் கலந்து கூவம் ஆற்றைப் போன்று காட்சியளிக்கிறது. பன்றி பண்ணைகளின் இந்த செயலால் தண்ணீர் மாசுபடுவதுடன் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

    இதனால் அங்கு சுகாதாரகேடு நிலவுவதுடன் தண்ணீர் மூலம் நோய்கள் பரவும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பரளியாற்றிலுள்ள குடிநீர் திட்டங்களுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே பிராணிகளின் கழிவுகளால் உலகை அச்சுறுத்தும் வைரஸ்கள் பரவும் நிலையில் பெருவழிகடவு பகுதியில் பன்றி பண்ணைகளால் உருவாக்கப்படும் சுகாதார கேடுகள் குறித்து சுகாதாரதுறை கண்டுகொள்ளவில்லை. பன்றி பண்ணைகளால் பரளியாறு மாசுபடுவதை சுகாதாரத்துறையும் பொதுப்பணித்துறையும் கண்டுகொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

பொதுப்பணித்துறை  நடவடிக்கை எடுக்கவேண்டும்
மனோதங்கராஜ் எம்.எல்.ஏ கூறியதாவது: குமரிமாவட்டத்தின் வளத்திற்கும் பசுமைக்கும் மூலகாரணமாக இருப்பது மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் ஆறுகளாகும். கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் கழிவுநீ கலந்து மாசுபடுவதை தடுக்க வேண்டும். தண்ணீர் தூய்மையானதாக அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக பசுமையையும் இயற்கையும் காப்பாற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை சமூக அமைப்புகளுடன் சேர்ந்து செயல்படுத்தி வருகிறோம். இதற்கு அரசுதரப்பில் ஒத்துழைப்பும் நடவடிக்கையும் இல்லாததால் எதுவும் செய்ய முடிவதில்லை. தற்போது குமரிமேற்கு மாவட்ட மக்களின் குடிநீராதாரம், நிலத்தடிநீராதாரம் போன்றவற்றில் முக்கிய பங்குவகிக்கும் பரளியாற்றில் பெருவழிகடவு பகுதியில் 6 இடங்களிலுள்ள பன்றி பண்ணைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அந்த பகுதியிலுள்ள பரளியாற்றில் கலந்து தண்ணீர் மாசுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். இதனால் பெருவழிகடவு பகுதி முழுவதும் சுகாதாரகேடு ஏற்படுவதுடன் பல லட்சம் மக்கள் குடிநீருக்கும், குளிப்பதற்கும் பயன்படும் பரளியாற்று தண்ணீரால் நோய்கள் பரவும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு பொதுப்பணித்துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு தண்ணீர் மாசுபடுவதை தடுப்பதோடு இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பன்றி பண்ணைகளை அகற்ற வேண்டும்
சுருளோடு ஊராட்சி தலைவர் விமலா சுரேஷ் கூறியது: சுருளோடு ஊராட்சிக்குட்பட்ட பெருவழிகடவு பகுதியில் 6 இடங்களில் பன்றி பண்ணைகள் உள்ளது. இந்த பண்ணைகளிலிருந்து கழிவுகள் மற்றும் கழிவுநீர் போன்றவை பரளியாற்றில் கலந்து பெரும் சுகாதாரகேட்டை உருவாக்குவதோடு அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் நிலம், நீர், காற்று மாசுபட்டு வருகிறது. முன்பிருந்த ஊராட்சி நிர்வாகம் இதன் பின்விளைவு தெரியாமல் அனுமதியளித்தது தான் இதற்கு காரணம். தொற்றுநோய்கள் உருவாவதற்கு காரணமாக இருக்கும் இந்த பன்றி பண்ணைகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டும். சுருளோடு ஊராட்சி சார்பில் முறையாக தீர்மானம் நிறைவேற்றி இந்த பன்றி பண்ணைகளை நிரந்தரமாக அகற்றி அங்கு தூய்மையை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

கேரள முதலாளிகளின் பண்ணைகள்
கேரள மாநிலம் இயற்கையை பாதுகாப்பது, தூய்மையை பேணுவது சுகாதாரத்தை உறுதிபடுத்துவது போன்றவற்றில் கடுமையான விதிமுறைகளை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இதனால் சுகாதாரகேடுகளை உருவாக்கும் செயல்கள் அங்கு குறைவாக உள்ளது. கேரளாவை சேர்ந்தவர்கள் மீன்கழிவு, கோழிக்கழிவு போன்றவைகளை லாரிகளில் கொண்டு வந்து தமிழகத்தில் கொட்டி செல்கின்றனர். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பல இடங்களில் பெரிய அளவிலான பன்றி பண்ணைகளை நிறுவி சுகாதாரகேட்டிற்கு சவாலை ஏற்படுத்தியுள்ளனர். பெருவழிகடவில் உள்ள பன்றி பண்ணைகளில் பெரிய பண்ணை ஒன்று கேரளாவை சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதிலிருந்து அதிக அளவு கழிவுகள் பரளியாற்றில் கலக்கிறது. இதேபோன்று பொன்மனை பேரூராட்சிக்குட்பட்ட பெரவூர் பகுதியில் கேரளாவை சேர்ந்த ஒருவரால் நிர்வகிக்கப்படும் பன்றி பண்ணையால் அந்த பகுதியிலும் சுகாதாரகேடுகள் நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : Pig farms ,area ,Peruvikadavu ,yard ,
× RELATED தனியார் வங்கி மேலாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது..!!