×

தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மசோதா நாகர்கோவிலில் இன்று கருத்து கேட்பு கூட்டம்

நாகர்கோவில், பிப்.26: தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை மசோதா தொடர்பாக நாகர்கோவிலில் இன்று (26ம் தேதி) கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.தேசிய கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) மசோதா 2019 விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்றும் முன்பாக மீனவ மக்களின் கருத்தை அறிய அரசு கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துகிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் இன்று (26ம் தேதி) புதன் கிழமை காலை 11 மணிக்கு நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக கருத்து கூற பொதுமக்களுக்கும் மீன் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கடலில் 20 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் உரிமம் இன்றி மீன் பிடிக்க இயலாது. உரிமத்தை நிராகரித்தல், உரிமம் எடுத்தால் கூட அதனை திரும்ப பெறுதல் போன்றவற்றுக்கு மத்திய அரசுக்கு அதிகாரத்தை இம்மசோதா வழங்குகிறது.

விதிமுறையை மீறினால் தேசிய பாதுகாப்பு கருதியோ, பொதுநலன் சார்ந்தோ உரிமம் ரத்து செய்யப்படும். இது தொடர்பாக கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுக்கு தனி அமைப்பு உருவாக்கப்படும். படகுகளில் ஆட்களை பணி அமர்த்துவது, காப்பீடு போன்றவை வணிக கப்பல் சட்டம் 1958 ன்படி வரையறை செய்யப்படும். வெளிநாட்டு கப்பல்களுக்கு பெரிய கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. பல்லுயிர் பாதுகாப்பு என்கிற பெயரில் கடல் பகுதியில் மீன்பிடித்தலை தடை செய்யும் உரிமையை இம்மசோதா கொண்டுள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள நிலையில் இதற்கு மீனவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கருத்து கேட்பு கூட்டத்திலும் மீனவர் அமைப்புகள் மசோதாவுக்கு எதிராக மனுக்களை அளிக்க முடிவு செய்துள்ளன.


Tags :
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...