×

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக கிணறு அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்

திருவாரூர், பிப்.25: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் சோழங்கநல்லூர் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் கிணறு அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்த வேண்டும் என கலெக்டர் ஆனந்திடம் பிஆர் பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர்.திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி. ஆர்.பாண்டியன் மற்றும் பொறுப்பாளர்கள் மனு ஒன்றினை அளித்துள்ளனர். அதில் கோட்டூர் ஒன்றியம் சோழங்கநல்லூர் மற்றும் பெரியகுடி பகுதியில் சட்டவிரோதமாக ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக கிணறுகள் அமைப்பதை தடுத்து நிறுத்தக்கோரி, கடந்தாண்டு ஜூலை மாதம் கோட்டூர் போலீஸ் ஸ்டேஷன் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

பின்னர் மன்னார்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது 2016ம் ஆண்டு முதல் புதிதாக கிணறுகளை அமைப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் டெல்டா மாவட்டங்களில் எந்த இடத்திலும் அனுமதி வழங்கவில்லை என்பது தெரியவந்ததன் பேரில், உடனே மேற்படி சோழங்கநல்லூர் மற்றும் பெரிய கூடிய பகுதியில் கிணறுகள் அமைக்கும் பணியை நிறுத்திக் கொள்வது என ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்டது.இந்நிலையில் பெரியகுடி பகுதியில் இருந்து உடனே அந்த நிறுவனம் வெளியேறிய நிலையில் சோழங்கநல்லூர் பகுதியில் தொடர்ந்து தனது பணியினை மேற்கொண்டு வருகிறது. மேலும் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், ஓஎன்ஜிசி நிறுவனம் இதுபோன்று தொடர்ந்து பணியினை மேற்கொண்டு வருவதை மாவட்ட நிர்வாகம் உடனே தடுத்து நிறுத்திட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : wells ,
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்