×

நாகை பஸ் ஸ்டாண்ட் எதிரே மது பாராக மாறிய அரசு அலுவலக வளாகம்

நாகை,பிப்.25: நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் எதிரே உள்ள அரசு வளாகத்தில் இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக மாறி வருவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை புதிய பஸ்ஸ்டாண்ட் எதிரே உள்ள வளாகத்தில் கோர்ட், தாசில்தார் அலுவலகம், அரசுடமையாக்கப்பட்ட வங்கி கிளை, காவல்துறை கட்டுப்பாட்டு அறை, போலீசாரின் தகவல் பரிமாற்றம் செய்யும் அலுவலகம், மாவட்ட சிறைச்சாலை என்று அரசு சார்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த வளாகத்தில் இரவு நேரங்களில் மது அருந்துவோர்கள் தங்களுக்கு புகலிடமாக மாற்றி வருகின்றனர். அதே போல் மாற்றுத்திறனாளிகளுக்காக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள கழிவறையில் இரவு நேரங்களில் சில விரும்பதகாத செயல்களும் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

அரசு தொடர்புடைய அலுவலகங்கள் நிறைந்த இந்த வளாகத்தில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ளாமல் இருப்பது தான் இது போன்ற சமூகவிரோத செயல்களுக்கு இடம் அளிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது. அருகில் உள்ள புதிய பஸ்ஸ்டாண்ட், கடைகள் ஆகியவற்றில் இரவு நேரங்களில் கண்காணிக்கும் போலீசார் இந்த வளாகத்தை மட்டும் கண்காணிக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை என்று தெரிவிக்கின்றனர். எனவே இனி வரும் காலங்களில் இதுபோன்ற சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : Government ,Bus Complex ,
× RELATED சிவகாசி அருகே மழையால் சேதமடைந்த அரசு பள்ளி: அதிகாரிகள் கவனிப்பார்களா?