×

முதல்வர் எடப்பாடி அறிவித்த ஆலந்தலை தூண்டில் வளைவுக்கான ஆயத்த பணிகள் விரைவில் துவங்கும்

தூத்துக்குடி, பிப். 25: ஆலந்தலையில் ரூ.52 கோடியில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான ஆயத்த பணிகள் விரைவில் துவங்கும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், பாரத பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் உழவர் கடன் அட்டை பெறுவதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில்  இதுவரை 48 முகாம்கள் நடத்தியதில் 47,475 பேர் பதிவு செய்துள்ளனர். வருகிற 28ம் தேதி வரை முகாம் நடைபெற உள்ளது. இந்த கடன் அட்டை மூலம் வங்கியில் ரூ.1.5 லட்சம் வரை 4 சதவீத வட்டியில் ஜாமீன்தாரர்கள் இல்லாமல் கடன் பெற்றுக் கொள்ளலாம். மேலும் கால்நடை வாங்குவதற்கு ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கப்படும். திருச்செந்தூரில் நடந்த விழாவில், தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் அறிவித்தார். இதில் முக்கிய திட்டமான ஆலந்தலையில் ரூ.52 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஆயத்த பணிகள் விரைவில் தொடங்கும். மேலும், ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தின் கீழ் இதுவரை 2,890 பேர்  பயன்பெற்று உள்ளனர். நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 57 பேர், தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வாங்கி உள்ளனர். தற்போது எந்த ஒரு நெட்வொர்க் பிரச்னையும் இல்லை, என்றார்.

முன்னதாக, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை மூலம் திருக்களூரை சேர்ந்த ஈஸ்வரி, பரமேஸ்வரி, இசைவாணி ஆகிய 3 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, தூத்துக்குடி வட்டம் பேரூரணியில் 29 திருநங்கைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள இலவச வீட்டுமனை பட்டா, பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்த வீரபாண்டிய கட்டப்பொம்மன் வாரிசுதாரர் வீமராஜா ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்மு துரைக்கு கலெக்டர் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.17 ஆயிரம் மதிப்பிலான காதொலி கருவி ஆகியவற்றை கலெக்டர் சந்தீப் நந்தூரி வழங்கினார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் விஷ்ணு சந்திரன், சப்-கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் காலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, சமூக பாதுகாப்பு திட்ட சப்-கலெக்டர்  சங்கர நாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சண்முகசுந்தரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Edappadi ,
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்