×

உலக தாய்மொழி தினத்தையொட்டி பள்ளி மாணவர்கள் உலக சாதனை

அம்பை, பிப். 25: உலக தாய் மொழி தினத்தையொட்டி கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, நேசனல் எஜூகேசனல் டிரஸ்ட் சார்பில் மணிமுத்தாறில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சியில் தமிழ் 2020 என்று  தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட எழுத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இடம்பெற்றனர். உலகின் பழமையான செம்மொழியாம் தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில் தமிழ் 2020 அஸிஸ்ட் என்ற தலைப்பில் மணிமுத்தாறு பாலகங்காதர திலகர் மினி ஸ்டேடியத்தில் தமிழ் 2020 என்று  தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட எழுத்தில்  மாணவர்கள் இடம்பெற்று உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல் நிலைப் பள்ளி, புனித அந்தோனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி,  அரசு மேல் நிலைப்பள்ளி  மாணவர்கள் என மொத்தம் 2036 அணிவகுத்து நின்று உலக சாதனை நிகழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து திலகர் பள்ளி கலையரங்கில் முன்னாள் மாணவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திலகர் பள்ளிச் செயலாளர் சங்கரசுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீர்த்தபதி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பண்டாரசிவன் வரவேற்றார். கவிதை வானில் கவி மன்றத்தின் தலைவர் கலாவிசு, அஸிஸ்ட் வேல்டு ரிகார்ட்ஸ் ரிசர்ச் பவுண்டேசன் நிறுவனர் ராஜேந்திரன், முன்னாள் மாணவர்கள் உமர் பரூக், லத்தீப், மருதையா  உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். விழாவில் முன்னாள் மாணவர்கள் பள்ளிச் செயலாளர் சங்கரசுப்பிரமணியன், சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி  ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இருவரும் நன்றி தெரிவித்து ஏற்புரையாற்றினர்.

இதில் மாவட்ட கல்வி அலுவலர் வயலெட், நூலகர் கயல்விழி, அம்பை கலைக்கல்லூரி நிர்வாகிகள் அருணாசலம், தங்கப்பாண்டியன், ஆவின் ஆறுமுகம், ரீச் சீனிவாசன், அம்பை தமிழ் இலக்கிய மன்ற பேரவைச் செயலாளர் லட்சுமணன், ஷேக் மீரான், அப்துல் மஜீத் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பலர்  பங்கேற்றனர். இதையொட்டி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. நிகழ்ச்சிகளை ஆசிரியர் சந்தோஷ் தொகுத்து வழங்கினார். நேசனல் எஜூகேசனல் டிரஸ்ட்டை சேர்ந்த முகமது முகைதீன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED ஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு