×

பின்னலாடை தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் குடியிருப்பு திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது

திருப்பூர், பிப்.23:  திருப்பூர் மாவட்டம் விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால்  பின்னலாடை தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் குடியிருப்பு திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாதென கட்சி சார்பற்ற தமிழக விவசாயகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து  கட்சி சார்பற்ற தமிழக விவசாயகள் சங்கத்தின் மாநில தலைவர் காளிமுத்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் விவசாயம் சார்ந்த பகுதியாகும். அமராவதி, பரம்பிக்குளம்-ஆழியாறு, கீழ் பவானி ஆகிய பாசன கால்வாய் மூலம் 5 லட்சத்திற்கு மேற்பட்ட ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெருகிறது.  திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாயம் சார்ந்த ஆலைகளால் நிலத்தடி  நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய விளை நிலங்கள் மலடாக மாறியுள்ளது. திருப்பூர் மாநகர் பகுதியில் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு பவானி, காவிரி ஆகிய  ஆற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

திருப்பூர் பி்னனாடை நிறுவனங்கள் உள்நாட்டில் மட்டுமே ரூ.16 ஆயிரம் கோடிக்கு  மட்டுமே ஆடைகளை தயாரித்து விற்பனை செய்கிறது. ரூ.26 ஆயிரம் கோடிக்கு மேல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் வட மாநிலங்களைச்சார்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஒரு தொழிலாளி குறைந்தபட்சம் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கினால்  2 லட்சம் பேருக்கு ரூ.200 கோடி வருவாய் கிடைக்கிறது. இந்த தொகை முழுவதையும் அவர்களுடைய சொந்த மாநிலத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்புகின்றனர். ரூ.200 கோடி பணம்  தமிழகத்தில் புழக்கம் ஏற்படுவது இல்லை. தமிழக தொழிலாளர்களுக்கு பயன் இல்லாததும்,  ஏற்கனவே சாயம் சார்ந்த ஆலைகளால் நிலத்தடி நீர் மட்டம் மாசு, காற்று மாசு ஏற்பட்டு திருப்பூர் பகுதி மக்கள் பல்வேறு வியாதிகளால் அவதிப்படுகின்றனர்.
திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்டும் பட்சத்தில் புதிதாக பல ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் திருப்பூரில் வசிக்கும் நிலை ஏற்படும். புதிய ஆர்டர் கிடைக்கும் பட்சத்தில் துணிகளுக்கு சாயமிடுவதும் அதிகரிக்கிறது. இதனால், நிலத்தடி நீர் மாசுவால் விவசாயம் பட்டுப்போய் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். திருப்பூரில் பின்னலாடை தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் குடியிருப்பு திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : government ,Tamil Nadu ,
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...