×

ஊட்டி கேரட் தட்டுப்பாட்டை போக்க மேட்டுப்பாளையத்துக்கு வந்தது டெல்லி கேரட்

ஊட்டி, பிப். 25: ஊட்டி கேரட் தட்டுப்பாட்டை போக்க மேட்டுப்பாளையம் சந்தைகளுக்கு டெல்லி கேரட் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஊட்டி கேரட் விலையும் குறைய வாய்ப்புள்ளது.  ஊட்டி கேரட்டிற்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நல்ல விலை கிடைத்து வந்தது. கிலோ ஒன்று ரூ.50 முதல் 80 வரை விலை போனது. தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் கேரட் விலை உச்சத்தில் இருந்ததால், அதிக லாபம் கிடைத்து வந்தது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் மற்ற பயிர்களை பயிர் செய்வதை விட இம்முறை கேரட் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டினர். பொதுவாக, நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை ஊட்டி கேரட் விளைச்சல் குறையும். இச்சமயங்களில் கொடைக்கானல், கர்நாடகம் போன்ற பகுதிகளில் இருந்து வரும் கேரட் ஊட்டி கேரட்டின் தட்டுப்பாட்டை சரி செய்யும். ஆனால், இம்முறை முதன் முறையாக ஊட்டி கேரட் தட்டுப்பட்டை போக்க தற்போது வியாபாரிகள் பலர் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு டெல்லி கேரட்டை இறக்குமதி செய்கின்றனர். நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 டன் வரையில் இந்த கேரட் இறக்குமதி செய்யப்படுகிறதாம்.

இதன் மூலம் ஊட்டி கேரட் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியும் மற்றும் விலையேற்றத்தையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மேட்டுப்பாளையம் கேரட் வியாபாரி ரமேஷ் கூறுகையில், ‘‘கேரட் பற்றாக்குறையை சமாகளிக்கவும், குறைந்த விலையில், பொதுமக்களுக்கு கேரட் விற்பனை செய்ய வேண்டும் என நினைத்து தற்போது நாள் ஒன்றுக்கு 25 முதல் 30 டன் வரை டெல்லியில் இருந்து நேரடியாக மேட்டுப்பாளையத்திற்கு கேரட் கொண்டு வருகிறோம். இந்த கேரட் கிலோ ஒன்று ரூ.30 முதல் 40 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. மேலும், குறைய வாய்ப்புள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் கேரட் வாங்கிச் செல்ல முடியும்,’’ என்றார். ஊட்டி கேரட் உற்பத்தியை சமாளிக்க தற்போது டெல்லி கேரட் இறக்குமதி செய்யப்படும் நிலையில், ஊட்டி கேரட் விலையும் குறைய வாய்ப்புள்ளது.

Tags : Ooty ,Mettupalayam ,
× RELATED மழை பெய்யாத நிலையில் ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் பூப்பதில் தாமதம்