×

சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

சத்தியமங்கலம், பிப். 25:  சத்தியமங்கலம் அருகே சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் மேட்டூரிலிருந்து சத்தியமங்கலம் செல்வதற்காக சாலையில் சென்றபோது திடீரென சாலையின் குறுக்கே சிறுத்தை ஓடியதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவலறிந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சத்தியமங்கலம் வனச்சரக அலுவலர் பெர்னாட் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தனர். அப்போது திலகவதி மற்றும் தங்கவேல் ஆகியோரது விளைநிலங்களில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகியிருந்ததை உறுதி செய்தனர். சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனர்.

தோட்டங்களில் பூப்பறித்தல், களைவெட்டுதல் உள்ளிட்ட விவசாய பணிக்கு வந்த கூலித்தொழிலாளர்கள் வேலை செய்ய அச்சம் தெரிவித்தனர்.
 இப்பகுதியில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் அருண்லால் அறிவுரையின் பேரில், சிறுத்தை நடமாடிய பகுதியில் 4 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டது. உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்றபின் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். சத்தியமங்கலம் நகர்ப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டதால் சுற்றுவட்டார கிராம மக்களும், விவசாயிகளும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் சிறுத்தை நடமாடிய பகுதியில் இரவு நேரத்தில் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சும் பணிக்கு செல்லவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags : Leopard walk ,farm ,Sathyamangalam ,
× RELATED சத்தியமங்கலம் கிராமத்தில் காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி..!!