×

சாலை விபத்துக்கு காரணமாக இருக்கும் கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்ேகாரி வழக்கு கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, பிப். 25: சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துக்கு காரணமாக இருக்கும் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் காந்தியம்மாள், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை, புதுதாமரைப்பட்டியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சாலையில் 10 முதல் 15 மாடுகள் நடமாடிக்கொண்டும், சண்டை போட்டுக்கொண்டும் இருந்தன. அப்போது எதிர்பாராதவிதமாக 2 மாடுகள் சண்டையிட்டபடி திடீரென்று வண்டியில் இருந்த என்மீது விழுந்தது. இதனால் வண்டி கீழே விழுந்து, அதன் மீது நான் விழுந்து, என்மீது 2 மாடுகளும் விழுந்தன. இதனால் எனக்கு காயம் உண்டானது. அப்பகுதியில் மாடுகளினால் சாலை விபத்து அடிக்கடி நடக்கிறது. இதுபோன்று சாலையில் கால்நடைகளில் உரிமையாளர்களின் பொறுப்பற்ற செயலால் பலரது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. பகல், இரவு என்று எப்போதும் சாலையில் மாடுகள் நடமாடுவதும், படுத்து இளைப்பாறுவது போன்றவற்றால் சாலையை பயன்படுத்தும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே வழக்கு குறித்து மாவட்ட அளவில் குழு அமைத்து, சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தும், நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நேற்று நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து மதுரை மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Case Collector ,animal owners ,Municipal Commissioner ,road accidents ,
× RELATED தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்...