×

பரமக்குடி அரசு மருத்துவமனையில் பணிக்கு வருவதில் டாக்டர்கள் தாமதம் பரிதவிக்கும் நோயாளிகள்

பரமக்குடி, பிப்.25:  பரமக்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் வருவதற்கு தாமதமானதால் நோயாளிகள் காத்திருக்கும் அவலம் உள்ளது. இதனால் கலெக்டர் நடவடிக்கை எடுக்க நோயாளிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடி அரசு மருத்துவமனை ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய மருத்துவமனையாக உள்ளது. இந்த மருத்துவமனைக்கு பரமக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பரமக்குடி அருகில் உள்ள நயினார்கோவில், முதுகுளத்தூர், பார்த்திபனூர், சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட. ஒன்றியங்களை சேர்ந்த நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் தினமும் 300க்கும் மேற்பட்டவர்கள் வெளிநோயாளிகளாக வந்து செல்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கு பணியாற்ற கூடிய சில டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த நேரத்திற்கு வராமல் காலதாமதமாக வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று காலை 7.30 மணிக்கு மணிக்கு வரவேண்டிய டாக்டர்கள் வராததால் புறநோயாளிகள் டாக்டர்களின் அறைகளுக்கு முன்பாக இரண்டு மணி நேரம் காத்திருந்தனர். டாக்டர்கள் பணிக்கு வருவதற்கு தாமதமானதால், பதிவு செய்யக் கூடிய புறநோயாளிகளின் பெயர் பதிவு நிறுத்தப்பட்டதால், பதிவு செய்யும் இடத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பணியில் இருந்த மருத்துவமனை உதவியாளர்களிடம் சிகிச்சைக்கு வந்தவர்கள், டாக்டர் குறித்து விவரம் கேட்டதற்கு, அநாகரீகமான வார்த்தைகளைக் கூறி விரட்டி உள்ளனர். காலதாமதமாக வருவதும், சிகிச்சைக்காக வரும் நோயாளியிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாக மருத்துவருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இதுகுறித்து நோயாளி பாஸ்கரன் கூறுகையில், காலை 7.30 மணிக்கு வரவேண்டிய டாக்டர்கள் வராததால் சுமார் இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கிறோம். சிகிச்சைக்கு வருபவரிடம் கனிவாக நடந்து கொள்ளாமல் வேண்டா வெறுப்பாக நடந்து கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனை நிர்வாக டாக்டரே கால தாமதமாக வருவதால், பணியாளர்களும் பணி நேரத்துக்கு வராமல் காலம் கடந்து தான் வருகின்றனர். பெயர் பதிவு செய்துவிட்டு டாக்டர்களுக்கு  பெண்கள் மற்றும் முதியவர்கள் கால் கடுக்க காத்திருக்கின்றனர். ஆகையால் கலெக்டர் வீரராகவராவ், அலட்சியத்துடன் பணிக்கு வராமல் காலம் கடத்தும் டாக்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Doctors ,Paramakudi Government Hospital ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை