×

மத்திய பட்ஜெட்டை கண்டித்து மார்ச் 2ம் தேதி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, பிப். 25:  அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டம், மத்திய பட்ஜெட்டை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு விரோதமான சட்ட திருத்தங்களை எதிர்த்து இயக்கங்களை நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதனை புதுச்சேரியில் நிறைவேற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டை ஏஐடியுசி அலுவலகத்தில் நடந்தது. சிஐடியு முருகன் தலைமை தாங்கினார். இதில் ஏஐடியுசி அபிஷேகம், தினேஷ்பொன்னையா, சேதுசெல்வம், ஐஎன்டியுசி  ஞானசேகரன், சிஐடியு பிரபு ராஜ், எல்பிஎப் அண்ணா அடைக்கலம், எல்எல்எப் செந்தில், ஏஐசிசிடியு பழனி, ஏஐயுடியுசி சங்கரன், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டில், தொழிற்சங்கங்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட்டுகளையும், பெருமுதலாளிகளையும் செல்வத்தை உருவாக்குபவர்களாக புகழ்ந்து விட்டு, எல்ஐசி, பீபிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை இந்த ஆண்டில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் விற்க போவதாக பட்ஜெட்டில் கூறியுள்ளார்கள். மருத்துவம், கல்வி, சமூக நலன்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளை பட்ஜெட் ஒட்டுமொத்தமாக கைவிட்டு விட்டது. இதனை கண்டித்து நாடு முழுவதும் மார்ச் 2 வரை போராட்டங்கள் நடத்துவதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியில் மார்ச் 2ம் தேதி தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது, தொழிலாளர் சட்ட தொகுப்புகள் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் நாளில் மறியல் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags : Demonstration ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்