×

புதுவையில் பைக் திருடிய தி.மலை வாலிபர் கைது

புதுச்சேரி,  பிப். 25: துணை ஜனாதிபதி வருகையையொட்டி  புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. சீனியர்  எஸ்பி உத்தரவுக்கிணங்க நகர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணிகளில்  ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு உருளையன்பேட்டை எஸ்ஐ  வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார், திருவள்ளுவர் சாலையில் ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தனர்.அப்போது பெரியார் சிலை அருகே சந்தேகத்துக்கிடமான  வகையில் வேகமாக பைக்கில் வந்த ஒரு வாலிபரை போலீசார் மடக்கி விசாரித்தனர்.  அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே, காவல் நிலையம் அழைத்து சென்று  அவரிடம் அதிரடியாக விசாரித்தனர். விசாரணையில் அவர், திருவண்ணாமலை  மாவட்டம், மாரியம்மன் கோயில் வீதி, 11வது குறுக்கு வீதியில் வசிக்கும்  பாலா என்ற பழனி (29) என்பதும், அவர் ஓட்டிவந்தது திருட்டு மோட்டார்  சைக்கிள் என்பதும், உருளையன்பேட்டையில் 4, பெரியகடை காவல் சரகத்தில் 2  வண்டிகளை அவர் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது  வழக்குபதிந்து அதிரடியாக கைது செய்த போலீசார், தமிழக பகுதியில் பதுக்கி  வைத்திருந்த மேலும் 5 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இவற்றின்  மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இவரிடம் திருட்டு மோட்டார் சைக்கிள்களை  வாங்கி அதன் உதிரி பாகங்களை விற்றதாக திருவண்ணாமலையைச் சேர்ந்த நூர்முகமது  (30) என்பதும் கைது செய்யப்பட்டார். கோழி கடையில் வேலை செய்தபோது  நூர்முகமதுவுடன் ஏற்பட்ட பழக்கத்தை பயன்படுத்தி இருவரும் குற்றத்தில்  ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து கைதான 2 பேரும்  பிற்பகலில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags :
× RELATED கோவையில் திருடுபோன பைக் பார்சலில்...