×

தொகுப்பு வீடுகளுக்கு மனு அளிக்க கடைசி நாள் என வதந்தி கலெக்டர் அலுவலகத்தில் அலைமோதிய பெண்கள் கடும் வெயிலிலும் நீண்ட வரிசை

நாகர்கோவில், பிப்.25 : தொகுப்பு வீடுகளுக்கு மனு அளிக்க கடைசி நாள் என வதந்தி பரவியதால், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் அளிக்க பெண்கள் ஏராளமானவர்கள் குவிந்தனர்.குமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. நீர் நிலை ஆக்கிரமிப்புகளில் இருந்த வீடுகள் அகற்றப்படும் போது, அங்கு குடியிருந்தவர்கள் தொகுப்பு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இது தவிர வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் தொகுப்பு வீடுகள் வழங்கப்பட உள்ளன. இந்த வீடுகள்  ஒதுக்கீடு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்படும் மனுக்கள் முறையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பால்குளத்தில் உள்ள தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு  தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க நேற்று (24ம்தேதி) கடைசி நாள் ஆகும். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வீடுகள் உடனடியாக ஒதுக்கீடு செய்யப்படும் என்ற வதந்தி காட்டு தீயாக பரவியது. இதையடுத்து கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், மயிலாடி, கோவளம், கொட்டாரம் உள்பட கன்னியாகுமரியை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மீனவர்கள் நேற்று காலை முதலே கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். பெண்கள் அதிகளவில் வந்து இருந்தனர்.

நேற்று திங்கட்கிழமை என்பதால், கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இதில் தொகுப்பு வீடுகள் கேட்டு விண்ணப்பம் அளிக்க வந்தவர்கள் நிரம்பி வழிந்ததால், குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்ற மாற்று திறனாளிகள் நல அலுவலகம் நெரிசலால் திணறியது. காலை 8 மணிக்கு வர தொடங்கிய பொதுமக்கள் மதியம் 2 மணி வரை தொடர்ந்து வந்தனர். இதனால் மனு அளிக்க நீண்ட வரிசை நின்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் வரிசையில் நின்றனர். கைகுழந்தைகளுடனும் சில பெண்கள் மணிக்கணக்கில் நின்றனர். ஏன்? இவ்வளவு கூட்டம் என்று தெரியாமல் முதலில் அதிகாரிகள் திணறினர். பின்னர் விசாரணை நடத்திய பின் தான் தொகுப்பு வீடுகளுக்கு விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் என வதந்தி பரவியது தெரிய வந்தது. இதையடுத்து தொகுப்பு வீடுகளுக்காக வந்த விண்ணப்பங்களை மொத்தமாக அதிகாரிகள் வாங்கினர்.குறை தீர்க்கும் நாள் முகாமில், வழக்கமாக மனுக்கள் பதிவு செய்யப்பட்டு மனு எண் அளிக்கப்படும். பகல் 1.45 மணி வரை அவ்வாறு தான் மனுக்கள் வாங்கப்பட்டன. அந்த நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளிக்க நின்று கொண்டு இருந்தனர். நிலைமை மோசமானதால், மனுக்களை மொத்தமாக வாங்கினர். சில பெண்கள் மனுக்களை கொடுக்க மறுத்தனர். கலெக்டரை பார்த்து கொடுத்தால் தான் வீடு கிடைக்கும் என கூறி உள்ளனர். எனவே நாங்கள் எவ்வளவு நேரம் ஆனாலும் கலெக்டரை பார்த்து மனு கொடுத்த பின் தான் கலைந்து செல்வோம் என்றனர்.

அப்போது அதிகாரிகள் யாரோ தவறான தகவலை கூறி உள்ளனர். இந்த மனுக்கள் கலெக்டரின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு வீடு கொடுக்கப்படும். மனு அளிக்க கடைசி நாள் என்று அப்படி எதுவும் இல்லை என்றனர். அதன் பின்னர் மனுக்களை கொடுத்தனர். நேற்றும் மட்டும் 800 க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்து இருப்பதாக அதிகாரிகள் கூறினர். இவற்றில் 90 சதவீத மனுக்களில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்தது. பெண்கள் பெயரில் தான் அதிக மனுக்கள் வந்து இருந்தன. மொத்தமாக மனுக்களை வாங்கிய பின், மதியம் 2.15 மணியளவில் நிலைமை சீரானது. தொகுப்பு வீடுகளுக்கான விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் என வதந்தி பரவியதால் தான் பெண்கள் ஒரே சமயத்தில் குவிந்தனர். வதந்தி பரப்பியவர்கள் யார் என தெரிய வில்லை. இது பற்றி காவல்துறையில் புகார் அளித்து விசாரிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.பணம் பறிக்க நடந்த நாடகமா? கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை புரோக்கர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மனு அளிக்க வருபவர்களை ஏமாற்றி பணம் பறிக்கப்படுகிறது. பத்திரிகையாளர்கள் போர்வையில், செல்போனில் படமெடுத்து மனு அளிக்க வருபவர்களிடம் பணத்தை பறித்து விடுகிறார்கள். இதற்காகவே ஒரு கும்பல் கலெக்டர் அலுவலகத்தில் நிற்கிறது. இதே போல் வீடுகளுக்கான விண்ணப்பம் அளிக்க வேண்டும் என கூறி  பண வசூல் நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. காவல்துறையில் முறையாக புகார் அளித்து விசாரணை நடத்தினால் இந்த சம்பவத்தின் பின்னணி தெரிய வரும் என அதிகாரிகள் கூறினர்.

நகைகளை கழற்றி பேக்கில் வைத்த பெண்கள்
கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க குழு, குழுவாக பெண்கள் வந்திருந்தனர். ஒரு சில குழுக்களை அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வரிசையில் நின்ற பெண்களிடம், நகைகளை கழற்றி பேக்கில் வைத்து கொள்ளுங்கள். தங்க நகைகள் இருந்தால் வீடு கொடுக்க மாட்டார்கள் என்றனர். இதையடுத்து பெண்கள் சிலர், நகைகளை கழற்றி பேக்கில் வைத்தனர். இன்னும் சில பெண்கள், கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். எனக்கு வீடு கிடைக்குமா? என்று மனு அளிக்க வரிசையில் நின்ற போது பக்கத்தில் உள்ளவர்களிடம் பேசி சந்தேகத்தை தீர்த்து கொண்டனர்.

Tags : package house ,collector ,women ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...