×

அகற்றப்பட்ட நிழற்குடையை மீண்டும் அமைக்காததால் பஸ்சுக்காக சாலையில் தவிக்கும் மாணவர்கள்: விபத்தில் சிக்கும் அபாயம்

புழல்: செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடைகளை மீண்டும் அமைக்காததால், பஸ்சுக்காக மாணவர்கள் சாலையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. செங்குன்றம் ஜிஎன்டி சாலையில் மார்க்கெட் பகுதி மற்றும் பாடியநல்லூரில் பஸ் நிறுத்தங்கள்  அமைந்துள்ளன. இங்கு, சென்னை மார்க்க சாலையிலும், பாடியநல்லூர் மார்க்க சாலையிலும் பயணிகள் வசதிக்காக நிழற்குடைகள்  அமைக்கப்பட்டன. தினசரி இங்கு வரும் ஏராளமான பயணிகள் இந்த நிழற்குடைகளை பயன்படுத்தி வந்தனர்.  இந்நிலையில், சாலை விரிவாக்க பணிக்காக, இந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டன. ஆனால், பணி முடிந்து நீண்ட நாட்களாகியும் இதுவரை நிழற்குடைகளை மீண்டும் அதே பகுதியில் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை
இந்த பகுதியில் ஒதுங்க கூட இடம் இல்லாததால் வெயில், மழை காலங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தினசரி இங்கு வரும் மாணவர்கள் பஸ்சுக்காக சாலையில் காத்திருப்பதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் சிலர் அடிக்கடி மயங்கி விழும் சம்பவங்களும் நடக்கிறது. எனவே, இப்பகுதியில் மீண்டும் பேருந்து நிழற்குடைகள் அமைக்க சம்பந்தப்பட துறை அதிகாரிகளிடம்  பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, இந்த பஸ் நிறுத்தத்தில் உடனடியாக நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘சாலை விரிவாக்க பணிக்காக இங்கிருந்து அகற்றப்பட்ட நிழற்குடைகள் மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்படவில்லை. நிழற்குடையை அகற்றி சென்ற அதிகாரிகள் அதை என்ன செய்தனர் என்பது  தெரியவில்லை.இதனால், சுட்டெரிக்கும் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இதுபோன்ற நேரங்களில் வயதானவர்கள் சிலர் மயங்கி விழுகின்றனர். மேலும், மாணவர்கள் பஸ்சுக்காக சாலையில் காத்திருப்பதால், போக்குவரத்துக்கு இடையூறு  ஏற்படுவதுடன், அதிவேகமாக வரும் வாகனங்கள் மோதி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் மீண்டும் நிழற்குடை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...