×

திருமங்கலத்தில் பராமரிப்பு பணிக்காக இன்று முழுவதும் ரயில்வேகேட் மூடல் சிவராத்திரிக்கு கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் அதிர்ச்சி

திருமங்கலம், பிப்.21:  திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள கேட் பராமரிப்பு பணிக்கு இன்று முழுவதும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவராத்திரிக்கு கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனையொட்டி விடத்தகுளம் ரோட்டில் ரயில்வே கேட் உள்ளது. கேட்டினை தாண்டி திருமங்கலம் நகரின் விரிவாக்க பகுதிகளான கற்பகம்நகர், காமராஜபுரம், சோணைமீனா நகர், ஆறுமுகம் வடக்குதெரு, சுங்குராம்பட்டி, விடத்தகுளம், விருசங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அமைந்துள்ளன. தற்போது இரட்டை அகலரயில்பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த ரயில்வே கேட் காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையில் பராமரிப்பு பணிக்காக மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக அறிவிப்பு திருமங்கலம் ரயில்வே கேட்டில் ஒட்டப்பட்டுள்ளது. இன்று மகாசிவராத்திரியாகும். பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது குலதெய்வ வழிபாட்டிற்கு வெளியூர் மற்றும் உள்ளூரிலுள்ள கோயில்களுக்கு செல்வது வழக்கம். சிவராத்திரி தினத்தன்று ரயில்வே கேட் ஒரு நாள் முழுவதும் அடைப்பதால் தங்களது பயணம் தடை ஏற்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே கேட் பகுதியிலுள்ள பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். அடுத்துள்ள பாண்டியன் நகர் ரயில்வே கேட்டினை பயன்படுத்தினால் கூட கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றனர்.

இதுகுறித்து திருமங்கலம் வாடகைகார் ஓட்டுனர் சங்கத்தை சேர்ந்த மூவேந்திரன் கூறுகையில், `` திருமங்கலம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக் கை ரயில்வே மேம்பாலமாகும். அது இன்றுவரையில் நடைமுறைக்கு வரவில்லை. தினசரி திருமங்கலத்தை கடந்து 65க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. ஒவ்வொரு முறையும் ரயில்வே கேட் மூடப்பட்டு திறக்கப்படுகிறது. அந்த நேரங்களில் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் கடும் நெரிசல் ஏற்படும். இந்தநிலையில் நாளை (இன்று) சிவராத்திரி. இந்த நாளில் ரயில்வேகேட் பராமரிப்பக்கு 10 மணிநேரம் மூடப்பட்டால் கேட்டினை தாண்டியுள்ள பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். குலதெய்வ கோயிலுக்கு செல்ல வாடகை வாகனங்களை பேசியுள்ள வாடகை ஓட்டுனர்கள், உரிமையாளர்களும் பாதிக்கப்படுவோம். கேட் அடைப்பால் சுமார் 5 கி.மீ தூரம் சுற்றி கிராமப்பகுதிகளுக்கு செல்ல வேண்டியிருக்கும். எனவே, மாதாந்திர பராமரிப்பு பணிகளை வேறு ஒருநாளுக்கு மாற்ற ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

Tags : Pilgrims ,temples ,Shivaratri ,Thirumangalam ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு