×

ஓடை இல்லாத இடத்தில் பாலம் எதற்கு? வத்தலக்குண்டுவில் பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு

வத்தலக்குண்டு, பிப். 21: வத்தலக்குண்டு- நிலக்கோட்டை சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் அகலப்படுத்தி தேவையான இடத்தில் புதிய பாலங்கள் அமைத்து வருகின்றனர். அந்த வகையில் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிர்புறம் இருந்த சிறிய பாலத்திற்கு பதில் பெரிய பாலம் கட்டும் பணியை துவங்கினர். இப்பாலம் கட்டும் இடத்திற்கு நேர் எதிரே உள்ள தெரு அழகர் நகராகும். இங்கு 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சுமார் 300 பேர் வசிக்கின்றனர். சேவுகம்பட்டி பேரூராட்சியை சேர்ந்த இப்பகுதி கழிவுநீர், சாலை வசதியின்றி உள்ளது. இங்கு புதிதாக பாலம் கட்டப்பட்டால் பாலத்தின் அடியில் வரும் மழைநீர், கழிவுநீர் நேரடியாக பள்ளமாக உள்ள அழகர் நகருக்குள் சென்று தேங்கி நிற்கும். இப்பகுதியில் ஏற்கனவே ஒருவர் டெங்குவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையினால் உயிர் தப்பியுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றால் மீண்டும் டெங்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி போன்றவை பாலம் கட்டப்பட்டால் அழகர் நகருக்குள் நுழைய முடியாது. இதனால் இப்பகுதி மக்கள், ‘இங்கு ஓடையே இல்லை, பிறகு எதற்கு பாலம் கட்டுகிறீர்கள், பாலம் கட்டினால் மழைநீரும்- கழிவுநீரும் நேரடியாக எங்கள் பகுதிக்குள் வந்துவிடும், எனவே பாலம் வேண்டாம்’ என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தொடர்ந்து பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அழகர் நகர் பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று பாலம் கட்டும் பகுதியில் திரண்டு பாலம் வேண்டாம் என கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் சில ஆண்கள் பாலம் கட்டுவதற்கு தோண்டப்பட்டிருந்த ஆழமான குழியினுள் இறங்கி பாலம் வேண்டாம் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வத்தலக்குண்டு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதன்பிறகே போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து அனைவரும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் சென்று பாலம் வேண்டாம் என்ற கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் கொடுத்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நவீன் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் சேவுகம்பட்டி பேரூராட்சியினர் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கி தார் சாலை அமைக்க முடிவு செய்தனர். தற்போது பாலம் அமைக்கும் பணி தொடங்கியதால் சாலைப்பணி நின்று விட்டது. ஓடை பகுதி வீடுகளாக மாறிவிட்டன. தற்போது ஓடையே இல்லாத நிலையில் பாலம் தேவையில்லை’ என்றார்.இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஏற்கனவே அப்பகுதியில் சிறு பாலம் இருந்ததால் பாலம் கட்ட தொடங்கினோம். பாலம் வேண்டாம் என்றால் அதை மேலதிகாரிகளிடம் கலந்து பிறகு தான் முடிவு எடுக்க வேண்டும்’ என்றனர்.


Tags : bridge ,stream ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...