×

திண்டுக்கல் யானை தெப்பத்தில் தோண்டிய குழியை மூடாததால் தொந்தரவு

திண்டுக்கல், பிப். 21: திண்டுக்கல் யானை தெப்பம் பகுதியில் குடிநீர் குழாய் சரிசெய்யும் பணிக்காக தோண்டிய குழி மூடப்படாமல் உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திண்டுக்கல்- மதுரை சாலையில் உள்ளது யானை தெப்பம். இப்பகுதி சாலையோரத்தில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் குடிநீர்குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் கழிவுநீர் கால்வாயில் கலந்து வீணானது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாநகராட்சி ஊழியர்கள் அந்த இடத்தை தோண்டி குழாயை சரிபார்க்கும் வேலையில் ஈடுபட்டனர். பின்னர்அந்த குழியை மூடாமல் அப்படியே விட்டு சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் அருகில் பள்ளிகள் இருப்பதால் மாணவ, மாணவிகள் இக்குழியில் விழும் அபாய நிலை உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் பல நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் ஓடையில் கலந்து வீணானது. பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் குழாயை சரிபார்க்க வேலையை தொடங்கினர். ஆனால் அந்த வேலையை முடிக்காமலும், குழியை மூடாமலும் அப்படியே விட்டு சென்றுள்ளனர். இதனால் இந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி, விபத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளது. மேலும் அருகில் பள்ளி இருப்பதால் குழந்தைகள் குழியில் விழும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனே குழியை மூட வேண்டும்’ என்றனர்.

Tags : Dindigul ,excavation pit ,
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...