×

ஆயக்குடி ஜிஹெச்சிற்கு இரவு மருத்துவர் அவசியம்

பழநி, பிப். 21: ஆயக்குடி அரசு மருத்துவமனைக்கு இரவு நேர மருத்துவர் நியமிக்க வேண்டுமென திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து திமுக பேரூர் செயலாளர் கார்த்திகேயன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில், ‘பழநி அருகே ஆயக்குடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியில் கடந்த 1966ம் ஆண்டில் அரசு மருத்துவமனை துவங்கப்பட்டது. 2010ம் ஆண்டில் அறுவைசிகிச்சை பிரிவு துவங்கப்பட்டது. அன்று முதல் இம்மருத்துவமனை 24 மணிநேரமும் செயல்பட்டு வந்தது. இதன்மூலம் ஆயக்குடி, புதுஆயக்குடி, ஓபுளாபுரம், பொன்னாபுரம், புதூர், கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, எரமநாயக்கன்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி கிராமங்களை சேர்ந்த சுமார் 30 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர்.பழநி தொகுதியில் பழநி, பண்ணைக்காடு, ஆயக்குடி என 3 பகுதிகளில்தான் அரசு மருத்துவமனை உள்ளன. இம்மருத்துவமனைகள் 24 மணிநேர சிகிச்சைக்காக துவங்கப்பட்டது. ஆனால், இன்று விதிமுறைகளுக்கு மாறாக ஆயக்குடி அரசு மருத்துவமனை 12 மணிநேரம் மட்டுமே செயல்படுகிறது. காலை- மாலை என இரண்டு நேரங்களில் மட்டுமே டாக்டர்கள் பணிக்கு வருகிறார்கள். இரவு நேரங்களில் பணியில் இருப்பதில்லை. டெங்கு, மர்மக்காய்ச்சல் அதிகளவு பரவி வரும் சூழ்நிலையில் ஆயக்குடி மக்கள் முழுமையான சிகிச்சைகளை பெற முடியாத நிலையில் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து ஆயக்குடி அரசு மருத்துவமனை 24 மணிநேரமும் செயல்பட வைக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Tags : Ayakudi GH ,night doctor ,
× RELATED ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர...