×

கோடைக்கு முன்பே சுட்டெரிக்கும் வெயில் வறட்சியின் கோரப்பிடியில் பாசன ஏரிகள்

தர்மபுரி, பிப்.21:  தர்மபுரி மாவட்டத்தில் கோடைக்கு முன்பே வெயில் சுட்டெரித்து வருவதால், பெரும்பாலான நீர்நிலைகள், வறட்சியின் கோரப்பிடியில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தை பொறுத்தவரை, முழுக்க முழுக்க விவசாயத்தையே பெரும்பாலான மக்கள் நம்பியுள்ளனர். மாவட்டத்தில் பெரிய ஆறுகள் எதுவும் இல்லாததால், அண்டை மாவட்டமான கிருஷ்ணகிரியில் ஓடும் தென்பெண்ணை ஆற்று தண்ணீரை பயன்படுத்தியே, ஒரு சில இடங்களில் பாசனம் செய்து வருகின்றனர். இதர பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. நன்கு மழை பெய்தால் மட்டுமே ஆங்காங்கே உள்ள ஏரிகளில் நிரப்பி வைத்து, அதன் மூலம் கிணறுகள் மற்றும் போர்வெல்களில் கிடைக்க கூடிய நீராதாரத்தையே ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் நிலை உள்ளது இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மாவட்டத்தில் கோடைக்கு முன்பாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் பாசன திட்டங்கள் அனைத்தும் கானல் நீராகி விட்டது. தென்பெண்ணை ஆற்று நீரை எண்ணேகொல்புதூர் ஏரியில் இருந்து தும்பலஅள்ளி ஏரிக்கு கொண்டு வரும் திட்டம், உலியாளத்தில் இருந்து தூள்செட்டி ஏரிக்கு தென்பெண்ணை ஆற்று தண்ணீரை கொண்டு வரும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் கனவாகவே உள்ளது. இந்த திட்டங்களை நிறைவேற்றினால் மாவட்டத்தில் 75 சதவீத ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரமுடியும். காரிமங்கலம் பகுதியில் தும்பல அள்ளி ஏரி, திண்டல் ஏரி, பைசுஅள்ளி ஏரி, அடிலம் ஏரி, பூமாண்டஅள்ளி ஏரி, காளப்பநாயக்கன அள்ளி ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளுக்கும், மழை பெய்தபோது தண்ணீர் வந்ததோடு சரி. அதற்கு பின்பு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராததால், விவசாயிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடத்தூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாறியுள்ள நிலையில், பணத்தேவைக்காக மரங்களையும் அடியோடு வெட்டி விற்கும் பரிதாபம் உள்ளது. இதனால், ஆண்டுதோறும் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் உள்ள வாணியாறு அணையில் எஞ்சியிருந்த தண்ணீரையும், பாசனத்திற்காக திறந்து விட்டு விட்டனர். இதனால், வெங்கிடசமுத்திரம், ஆலாபுரம், ஒந்தியாம்பட்டி, பறையப்பட்டி மற்றும் தென்கரைக்கோட்டை ஏரிகள் பயனடைந்தாலும், அந்த தண்ணீரும் சிறிது காலத்திற்கு மட்டுமே தாக்குபிடிக்கும். கடத்தூர் பகுதியில் உள்ள துறிஞ்சிப்பட்டி ஏரி, வெங்கடதாரஅள்ளி ஏரி, முத்தம்பட்டி ஏரி, கேத்துரெட்டிப்பட்டி ஏரி, பில்பருத்தி ஏரிகளும், வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளன.  பாலக்கோடு பகுதியில் உள்ள கும்மனூர் பெரிய ஏரி, சின்ன ஏரி, சாமனூர் ஏரி, தாமரை ஏரி, சோமனஅள்ளி ஏரி முதல் ராமக்காள் ஏரி வரை, பெரும்பாலான நீர்நிலைகளின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கியுள்ளன. பாசன பரப்பு குறைந்து கொண்டே வருவதால், வேலையில்லா திண்டாட்டம், உள்ளூர் தேவைக்கான உணவு தானியங்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் பெரும்பாலானோர் விருப்ப உணவாக பச்சரிசி சாதத்தையே சாப்பிட்டு வந்த நிலையில், நெல் சாகுபடிக்கு வழியில்லாத நிலையில், வெளியிடங்களில் இருந்து தருவிக்க கூடிய புழுங்கல் அரிசி பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே, மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்பாசன திட்டங்களை நடப்பு ஆண்டிலேயே நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை அரசு முடுக்கி விட வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Irrigation lakes ,sun drought ,
× RELATED தமிழகத்தில் பரவலாக பெய்யும் தொடர்...