×

பாலக்கோடு அருகே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காய்ந்து கிடக்கும் தூள்செட்டி ஏரி

பாலக்கோடு, பிப்.21:  பாலக்கோடு அருகே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காய்ந்து போய் காணப்படும் தூள்செட்டி ஏரியை, டாக்டர் செந்தில்குமார் எம்.பி. நேரில் பார்வையிட்டு, தென்பெண்ணை ஆற்று தண்ணீரை கொண்டு வந்து நிரப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தார். பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி அருகே உள்ள தூள்செட்டி ஏரிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் பணிக்காக, தமிழக அரசால் சுமார் 5 ஆண்டுக்கு முன்பு ₹69 கோடி மதிப்பிலான திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் பாலக்கோடு, மாரண்ட அள்ளி பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கக் கூடிய தூள்செட்டி ஏரி, கண்ணுக்கு எட்டிய தூரம் காய்ந்து போய் காணப்படுகிறது. இந்நிலையில், பாலக்கோடு பகுதியில் நேற்று சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்த தர்மபுரி டாக்டர் செந்தில்குமார் எம்.பி., தூள்செட்டி ஏரிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, ஆண்டுக்கணக்கில் நீர்வரத்தின்றி முற்றிலும் வறண்டுபோன நிலையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை புதர்மண்டி கிடக்கும் ஏரியை கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தூள்செட்டி ஏரி சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் சரியாக பராமரிக்காததால் தூர்ந்து போனதன் காரணமாக, இடையில் இருக்கும் நீர் வழித்தடம் முழுவதுமாக தடைபட்டு தூள்செட்டி ஏரிக்கு நீர் வராமல் போய் விட்டது. எனவே, தென்பெண்ணை ஆற்று நீரை மீண்டும் கொண்டுவர வேண்டுமென்ற பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையின் பேரில் கடந்த 2015ம் ஆண்ட தமிழக அரசால் ₹69 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்தும், உரிய முறையில் பணிகளை மேற்கொள்ளாததற்கு இப்பகுதி மக்களின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த ஏரி நிரம்பினால் தளவாய் அள்ளி ஏரி, சோகத்தூர் ஏரி உள்பட 50க்கும் மேற்பட்ட ஏரிகள் பாசன வசதி பெறுவதுடன், சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும்,’ என்றார்.
அப்போது, பாலக்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் முருகன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் குமார், கொமதேக மாவட்ட செயலாளர் ஆனந்தன், தூள் செட்டி ஏர ஒருங்கிணைப்பு குழு தலைவர் சாமனூர் குமார், முத்துராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் குட்டி(எ) வெங்கடேசன், துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Dulcetti Lake ,Palakkad ,
× RELATED பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்