×

ஏனாமில் 13 ஆயிரம் மக்களை வெளியேற்ற கவர்னர் உத்தரவு

புதுச்சேரி, பிப். 21: ஏனாமில் 13 ஆயிரம் மக்களை வெளியேற்ற கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.  புதுச்சேரி யூனியன் பிரதேசம் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 4 பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இதில் ஆந்திராவின் காக்கிநாடா அருகில் உள்ள ஏனாம் பகுதி 30  சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கோதாவரி நதிக்கரையோரம் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் 45 ஆயிரம் பேரில் நதிக்கரையோரம் மட்டும் 13 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஆண்டு தோறும் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான கோதாவரி ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண உதவி, சீரமைப்பு என ஒவ்வொரு ஆண்டும் ரூ. 4 கோடியை அரசு செலவு செய்ய வேண்டியிருக்கிறது.  ராஜீவ்காந்தி நகர், பாலயோகி நகர், பிரான்சுவாதெப்பா, பழைய ராஜீவ்காந்தி நகர்  உள்ளிட்ட 6 பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், வெள்ள நீர் உட்புகாதவாறும், மண் அரிப்பை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் அமைக்க அரசு திட்டமிட்டது.இது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் கோதாவரி நதியின் கரையோரம் நவீன தொழில் நுட்பத்தில் 15 கிலோ மீட்டர் நீளத்துக்கும், 15 அடி உயரத்துக்கும் சுவர் எழுப்ப திட்டமிடப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய பொதுப்பணித்துறை செயலர் அதிகாரிகள் கொண்ட குழு ஏனாமில் ஆய்வு செய்தது. அப்போது வெள்ள பாதிப்புகளை கருத்தில்கொண்டும், மண் அரிப்பை தடுக்கவும்  மத்திய அரசு மாநில அரசின் திட்டத்தினை ஏற்றுக்கொண்டது.

அதே நேரத்தில் இதற்கான செலவு  75 சதவீதம் மத்திய அரசும், மாநில அரசு 25 சதவீதமும் ஏற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் முழு தொகையை அரசு ஏற்க வேண்டுமென தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் மத்திய அரசை நேரில் சென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனையேற்று தடுப்பு சுவர் கட்ட ரூ. 137 கோடியை முழுமையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தது. 2016ம்  ஆண்டு முதல் பல்வேறு கட்ட போராட்டங்களை கடந்து 2018ம் ஆண்டு  நிதி ஒதுக்குவதற்கு மாநில அரசின் ஒப்புதலை கேட்டது. அதோடு எந்த துறையின் கணக்கில்  பணத்தினை விடுவிக்க வேண்டுமென தெரிவிக்குமாறு கடிதம் அனுப்பியது.  ஆனால் கவர்னர் கிரண்பேடி சில கேள்விகளை எழுப்பி இதற்கு அனுமதி தர மறுத்துவிட்டார். மேலும் என்னை கேட்காமல் நிதி ஒதுக்க கூடாது என ஜல்சக்தி துறைக்கு கடிதம் எழுதினார். இதனால் பணம் ஒதுக்குவது மத்திய அரசு திடீரென நிறுத்திக்கொண்டது. மேலும் ஆந்திராவின் தடையில்லா சான்று வேண்டும், நிவாரண உதவி அறிக்கை என வேண்டுமென கோப்புகளை கிரண்பேடி மீண்டும் சுற்றி விட்டார். ஆந்திராவின் தடையில்லா சான்று உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் முடித்து மீண்டும் கவர்னருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆனால் என்னை கேட்காமல் மத்திய அரசு முடிவு எடுக்க கூடாது என கோப்புகளை  அனுப்பவில்லை. தடுப்பு சுவர் கட்டுவதற்கான 18 மாதத்துக்கான காலக்கெடு வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.
இதையடுத்து மத்திய பொதுப்பணித்துறையே இந்த தடுப்பு சுவரை கட்டிக்கொடுக்குமாறு  புதுச்சேரி அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு, முதல்வர் நாராயணசாமி கடிதம் அனுப்பினார். இதனையேற்றுக்கொண்டு தடுப்பு சுவர் அமைக்க மத்திய அரசின் ஏஜென்சிக்கு அனுமதியளிக்குமாறு ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தெரிவித்தார்.  இந்த கடிதம் தலைமை செயலருக்கு சென்று, கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பினார். இதற்கும் அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார்.

இந்நிலையில் கோதாவரி நதிக்கரையோரம் வசிக்கும் குடும்பங்களின் மின் இணைப்பு துண்டித்து, அப்பகுதியில் இருக்கும் மக்களை உடனே வெளியேற்றுமாறு நகர அமைப்பு குழுமத்துக்கு கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். மின் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது என செயலர் மகேஷுக்கு நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். கவர்னர் கிரண்பேடியின்  இந்த அராஜகமான போக்கை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த  உத்தரவினை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து மல்லாடிகிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறுகையில், மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறேன் எனக்கூறும் கிரண்பேடி, ஏனாமில் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுவதற்கு தடையாக இருப்பது ஏன்? என்னை பழிவாங்க வேண்டுமென நினைத்து மக்களை பலியாக்கபார்க்கிறார்.  மத்திய அரசின் நிதியுதவியில், அவர்களே முன்னின்று கட்டித்தர முன்வந்தும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. வெள்ளக்காலங்களில் 10 அடிவரை  ஊருக்குள் நீர் புகுந்துவிடுகிறது. மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் பணத்தை கோடிக்கணக்கில் செலவு செய்து நிவாரணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. வரும் மார்ச் மாதத்தோடு தடுப்பு சுவருக்கான காலக்கெடு முடிந்துவிடுகிறது. அதன்பிறகு இந்த திட்டத்தினை துவக்குவது நடைமுறை சாத்தியமில்லை. என்னை கேட்காமல் இந்த திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தரக்கூடாது என்று மத்திய அமைச்சருக்கு நேரடியாக கடிதம் எழுதுகிறார். இது தான் மாநில நலன் மீது காட்டும் அக்கறையா? மத்திய அரசின் ஏஜென்சிதான் சுவரினை கட்டிக்கொடுக்கப்போகிறது. எப்படி தவறு நடக்கும். முழுக்க அரசியல் செய்கிறார். இவ்விவகாரத்தில் அனுமதி கொடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்துக்கு போவேன் என்றார்.

Tags : Governor orders evacuation ,Yanam ,
× RELATED ஏனாம் தீவை தாரை வார்க்க முயற்சி;...