பலியானவர்களுக்கு நிவாரணம் கேட்டு எட்டயபுரத்தில் சாலை மறியல்

எட்டயபுரம். பிப்.21:  எட்டயபுரம் ஆர்.சி. சர்ச் தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(60). நேற்று முன்தினம் தனது டிராக்டரில் மனைவி மரகதம்(55) மற்றும் 11 பேரை காட்டு வேலைக்கு அழைத்து சென்றார். மாலை வேலை முடிந்து திரும்பி வரும் போது மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது ஈரோட்டில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற லாரி மோதியதில் டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அந்தோணியம்மாள், கீதாராணி, மரகதம் ஆகியோர் பலியாகினர். பெரியசாமி உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் இறந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு தற்காலிக நிவாரணம் கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் ஈடுபட்டனர். அவர்களிடம் எட்டயபுரம் தாசில்தார் அழகர், விளாத்திகுளம் டிஎஸ்பி பீர்முகமது, எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவ்வழியாக சென்ற எஸ்பி அருண்பாலகோபாலன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் அரசு நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

>