×

மாற்றுத்திறனாளியை காப்பாற்ற முயன்றபோது பரிதாபம் முக்காணி ஆற்றில் மூழ்கி பாதயாத்திரை பக்தர் பலி

ஆறுமுகநேரி, பிப்.21:  முக்காணி தாமிரபரணி ஆற்றில் மூழ்கிய பாதயாத்திரை பக்தரை மீட்க முயன்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த முருகேசன் முகன் மாரிமுத்து(25), மாற்றுத்திறனாளி, சவரிமுத்து மகன் சிலுவை அந்தோணி(27) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட 150 பேர் நேற்று முன்தினம் காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.நேற்று காலை அவர்கள் அனைவரும் முக்காணி தாமிரபரணி ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது மாற்றுத் திறனாளியான மாரிமுத்து (25) என்பவர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் தத்தளித்தார். இதனை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  

உடனே சிலுவை அந்தோணி நீந்திச் சென்று மாரிமுத்துவை உடனடியாக மீட்டார். சக பக்தர்கள் மாரிமுத்துவை மீட்டு கரைக்கு தூக்கி வந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக ஆற்றின் சுழலில் சிக்கிய சிலுவை அந்தோணி தண்ணீரில் மூழ்கினார்.
இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் 15 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் மூழ்கிய சிலுவை அந்தோணியை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின் அவரது உடல் மீட்கப்பட்டது. ஆத்தூர் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த் மற்றும் போலீசார் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தண்ணீரில் மூழ்கியதால் மயங்கிய மாரிமுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த சிலுவை அந்தோணி தூத்துக்குடியில் உள்ள தனியார் இறால் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அவரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

Tags : Pilgrimage devotee ,river ,
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...