×

திருப்பூரில் 6ம் வகுப்பு மாணவியை கடத்த முயற்சி

திருப்பூர், பிப்.21:திருப்பூரில் 6ம் வகுப்பு மாணவியை கடத்த முயன்ற வாலிபரை பொதுமக்கள்  பிடித்து காவல் நிலையத்துக்கு பைக்கில் அழைத்துச்சென்றனர். அப்போது அவர் கீழே குதித்து தப்பியோடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் அவிநாசி ரோடு காந்தி நகர் அடுத்துள்ள சத்தியா நகரில்  ஓட்டல் நடத்தி வருபவரின் 11 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அவ்வழியே  நடந்து சென்ற 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சிறுமியின் வாயை பொத்தி தூக்கிச்செல்ல முற்பட்டார்.

அதிர்ச்சியடைந்த சிறுமி கையை கடித்து தப்பி வீடு நோக்கி ஓடி வந்தார். சிறுமி ஓடி வருவதை பார்த்த தந்தை வெளியே ஓடி வந்து கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்களின் துணையுடன் ஓட்டம் பிடித்த வாலிபரை பைக்கில் விரட்டிச்சென்று பிடித்தனர். பிடிபட்ட வாலிபரை பைக்கில் 15 வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அந்த வாலிபர் கீழே குதித்து தப்பியோடினார். இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசில் சிறுமியின் தந்தை புகார் கொடுத்தார். அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது  அவர் வடமாநில வாலிபர்போல் தெரிகிறது. இப்பகுதியில் பின்னலாடை நிறுவனங்களில் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கின்றனர். சிறுமி கடத்தல் முயற்சி சம்பவத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தப்பியோடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : abduction ,student ,Tirupur ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்