×

மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை கண்காணிக்க அலுவலர் நியமனம்

ஊட்டி, பிப். 21: நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை கண்காணிப்பதற்காக, கண்காணிப்பு அலுவலராக இண்ட்கோசர்வ் நிர்வாக இயக்குநர் சுப்ரியா சாஹு நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலராக இருந்த வனத்துறை முதன்மைச் செயலர் சந்திரகாந்த் காம்ேள தற்போது பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக குன்னூர் இண்ட்கோசர்வ் நிர்வாக இயக்குநரும், தமிழக அரசின் முதன்மைச் செயலரும், முன்னாள் நீலகிரி மாவட்ட கலெக்டருமான சுப்ரியா சாஹு நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை கண்காணிக்கும் கண்காணிப்பு அலுலவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் அரசின் அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளையும் கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹு கண்காணிப்பதுடன், அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பேரிடர் காலங்களில் மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே இவர் நீலகிரி மாவட்டத்தில் 2000 -2002ம் ஆண்டு கலெக்டராக 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி உள்ளதால், மாவட்டத்தில் எங்கெங்கு வளர்ச்சி பணிகள் தேவை என்பது நன்கு அறியும். அதேபோல், பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் தெரியும் என்பதால், இனி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் தரமானதாகவும், தேவையான இடங்களிலும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : officer ,district ,
× RELATED தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய,...