×

தஞ்சை வட்டார பகுதியில் நள்ளிரவு நேரத்தில் வெளிமாவட்ட நெல் கொள்முதல்

தஞ்சை, பிப். 21: தஞ்சை பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டுமென வருவாய் கோட்ட அளவிலான குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்தில் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. ஆர்டிஓ வேலுமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகளின் விவாதம் வருமாறு:காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் அம்மையகரம் ரவிச்சந்தர்: சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இரவு நேரத்தில் வெளிமாவட்ட நெல் கொள்முதல் செய்வதை தடுக்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் மாமூல் பிரச்னையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார்: கோடை பருவத்துக்கான பயிர் காப்பீடு தொடர்பாக விவசாயிகளிடம் விழிப்புணர்வு இல்லை. இதுகுறித்து விவசாயிகளுக்கு தெரியும் வகையில் ஆங்காங்கே விளம்பரம் செய்ய வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் நாள்தோறும் 800 மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்யப்படுவதில்லை. இதனால் எங்குமே 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் நெல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. சில நிலையங்களில் இரவு நேரத்தில் வெளிமாவட்ட நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.ஆர்டிஓ வேலுமணி: கொள்முதல் நிலையங்களில் இரவு நேரத்தில் நெல் கொள்முதல் செய்தால் விவசாயிகளிடம் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தும். எனவே இரவு நேரத்தில் கொள்முதல் செய்வதை தவிர்த்து உரிய நேரத்தில் மட்டுமே கொள்முதல் செய்யுமாறு நுகர்பொருள் வாணிப கழக அலுவலரிடம் அறிவுறுத்தினார்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணை செயலாளர் திருப்பூந்துருத்தி சுகுமாரன்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, சணல் தட்டுப்பாடு காரணமாக நெல் கொள்முதல் தாமதமாகிறது. இந்த தட்டுப்பாட்டை போக்க வேண்டும். மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் ஆனைக்கொம்பன் நோய், நெல் பழ நோய் தாக்கத்தால் மகசூல் மிகவும் குறைந்துவிட்டது. எனவே காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும்.ஆர்டிஓ வேலுமணி: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அனைத்து துறைகளில் இருந்து உயர் அலுவலர்கள் பங்கேற்க வேண்டும். இல்லாவிட்டால் கலெக்டரிடம் புகார் செய்யப்படும். அவர்களால் வர இயலாவிட்டால் பங்கேற்கும் அலுவலர்கள் கோரிக்கைகள் தொடர்பான விவரங்களை அறிந்து வந்து பதில் அளிக்க வேண்டும் என்றார். மேலும் வராத அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப உத்தரவிட்டார்.


Tags : region ,Tanjore ,
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!