×

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் முற்றுகையில் ஈடுபட்ட 2500 பேர் மீது வழக்கு

நாகர்கோவில், பிப்.21:  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் 2 ஆயிரத்து 500 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட ஜமா அதுல் உலமா பேரவை சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் எவ்வித அனுமதியும் இல்லாமல் முற்றுகை போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்ததாக ஜமா அதுல் உலமா பேரவை தலைவர் அப்துல் ரஹ்மான், ஜமா அத் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் எம்.ஏ.கான், தமுமுக மாவட்ட செயலாளர் திருவை செய்யது, மாவட்ட தலைவர் ஜிஸ்தி முகம்மது, நகர தலைவர் ஷேக் செய்யது அலி, சிறுபான்மை கூட்டமைப்பு தலைவர் ஞானதாசன், ஜமா அதுல் உலமா பேரவை செயலாளர் மீரான் மைதீன், குமரி மாவட்ட ஜமா அத் கூட்டமைப்பு துணை செயலாளர் அலி அக்பர், உலமா பேரவை துணை செயலாளர் கபீர் மற்றும் 1300 பெண்கள் உட்பட 2500 பேர் மீது நேசமணிநகர் சப் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் நேசமணிநகர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். சமீபகாலமாக குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு போலீசார் அனுமதி வழங்கி வந்த நிலையில் நேற்று முன் தினம் நடந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இதனால் போராட்டகாரர்கள் மீது மீண்டும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : persons ,siege ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது