×

திருவாரூர் 9வது வார்டில் அடிப்படை வசதி இல்லாத சுடுகாடு

திருவாரூர், பிப்.20: திருவாரூர் நகராட்சி 9வது வார்டில் உள்ள சுடுகாட்டில் மேற்கூரை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் நகராட்சி 9வது வார்டு கேக்கரை பகுதியில் சுடுகாடு உள்ளது. நகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த சுடுகாட்டினை கேக்கரை, ராமகே ரோடு, திருவள்ளுவர் தெரு, பிடாரிகோயில் தெரு உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தி வரும் சமத்துவ சுடுகாடாகவும் இருந்து வருகிறது.இந்நிலையில் இந்த சுடுகாட்டின் தகன மேடை மேற்கூரை பெயர்ந்து காணப்படுகிறது. இதில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுற்றுசுவரும் தற்போது தரை மட்டமாகி உள்ளது. மேலும் இந்த சுடுகாடானது சாலை மட்டத்தை விட சுமார் 4 அடிக்கு கீழே உள்ளதால் மழை காலங்களில் குட்டை போல் நீர் தேங்கி இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. மேலும் இங்கு போர்வெல் பைப் இல்லாததன் காரணமாக கோடை காலங்களில் ஒரு குடம் நீர் கூட கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதை தவிர மின் விளக்கு வசதி இல்லாத காரணத்தினால் மாலை 6 மணிக்கு மேல் இறுதி சடங்கு செய்வதற்கும் இப்பகுதி மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர்.

 மேலும் சுற்றுசுவர் இல்லாத காரணத்தினால் அடக்கம் செய்யப்படும் பிணங்களை நாய் போன்ற பிரானிகள் தோண்டி எடுத்து சேதப்படுத்தும் நிலையும் இருந்து வருகிறது, எனவே இந்த சுடுகாட்டிற்கு மேற்கூரை, மின்விளக்கு, போர்வெல் போன்ற வசதிகளை செய்து கொடுப்பதுடன் மழை காலங்களில் நீர் தேங்காமல் இருக்கும் வகையில் மேடாக்கி தருவதுடன் சுற்றுசுவரும் அமைத்து கேட் அமைத்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : facilities ,ward ,Thiruvarur 9th ,
× RELATED திருத்துறைப்பூண்டி 17வது வார்டு...