×

கொடியேற்றத்துடன் தொடங்குகிறது திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் 28ம் தேதி பிரம்மோற்சவம்

திருப்போரூர், பிப். 20: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் பிரம்மோற்சவம், வரும் 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மார்ச் 5ம் தேதி தோராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. புகழ்பெற்ற முருகன் திருத்தலமான திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாத பிரம்மோற்சவம் 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, இந்தாண்டு பிரம்மோற்சவம் வரும் 28ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.அன்று இரவு 8 மணிக்கு கிளி வாகனத்தில் முருகப்பெருமான் வீதி உலாவும், மறுநாள் 29ம் தேதி காலை தொட்டி உற்சவமும், இரவு பூத வாகன வீதிவுலாவும் நடக்கிறது. மார்ச் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை புருஷாமிருக உபதேச உற்சவமும், இரவு வெள்ளி அன்ன வாகன வீதி உலா, 2ம் தேதி ஆட்டுக்கிடா வாகன உற்சவம், இரவு வெள்ளி மயில் வாகன வீதி உலா நடக்கிறது. 3ம் தேதி பகலில் மங்களகிரி உற்சவம், இரவு தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் மற்றும் பஞ்சமூர்த்தி புறப்பாடு, 4ம் தேதி காலை தொட்டி உற்சவம், இரவு யானை வாகன வீதி உலா நடைபெறுகிறது. விழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 5ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இதில் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மார்ச் 6ம் தேதி காலை வெள்ளித்தொட்டி உற்சவம், மாலை 5 மணிக்கு ஆலத்தூர் கிராமத்துக்கு முருகப்பெருமான் எழுந்தருளி பரி வேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.

அன்று இரவு குதிரை வாகனத்தில் வீதி உலாவும், 7ம் தேதி காலை விமான உற்சவம், இரவு சிம்ம வாகனத்தில் ஆறுமுக சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் வீதி உலா நடைபெற உள்ளது. தொடர்ந்து, 8ம் தேதி காலை வெள்ளித் தொட்டி உற்சவம், பகல் 12 மணிக்கு சரவணப் பொய்கையில் தீர்த்தவாரி உற்சவம், மாலை 7 மணிக்கு தெப்ப உற்சவம், இரவு குதிரை வாகன வீதி உலா நடக்கிறது. 9ம் தேதி மாலை கிரிவல உற்சவம், இரவு பந்தம்பரி உற்சவம் நடக்கிறது.இதை தொடர்ந்து 10ம் தேதி மாலை வேடர்பரி உற்சவம், இரவு முருகப்பெருமான் வள்ளியை மணம் முடிக்கும் திருக்கல்யாண உற்சவம், அதையடுத்து 11ம் தேதி காலை 6 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் மணக்கோலத்தில் முருகப்பெருமான் வீதி உலா நடைபெற்று பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில் செயல் அலுவலர் சக்திவேல் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags : Brahmotsavam ,Thirupporeur Kandaswamy Temple ,
× RELATED திருவல்லிக்கேணி பார்த்தசாரதி...