×

காஞ்சிபுரம் அருகே வேடல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க சுரங்கப்பாதை

காஞ்சிபுரம், பிப்.20: காஞ்சிபுரம் அருகே வேடல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு புறத்தில் இருந்து மறுபுறம் செல்ல சுரங்கப்பதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலெக்டர் பொன்னையாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வேடல் கிராமம் உள்ளது. தற்போது 4 வழிச்சாலையாக உள்ள இந்த சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இந்த சாலை தென்பகுதி மேடாகவும், வடக்கு பகுதி 1.5 மீ தாழ்வாகவும் உள்ளது.இச்சாலையை கடக்க வழி ஏற்படுத்தி தராததால் சாலையைக் கடப்பது மிகவும் சிரமமாக உள்ளது. சில நேரங்களில் பொதுமக்கள் ஆபத்தான நிலையில் சென்டர் மீடியனை கடந்து செல்லும்போது, விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசார் சார்பில், இடையில் தடுப்பு வைத்துள்ளனர்.

இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள். பெண்களின் பேறுகால நேரங்கள், முதியோர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைக்கு செல்வது ஆகிய சமயங்களில் சுமார் 3 கிமீ சுற்றி சென்று, எதிர் பகுதிக்கு வரவேண்டியுள்ளது. அவசரம் கருதி சில நேரங்களில் சென்டர்மீடியனை கடந்துசெல்ல நினைத்தாலும் சுமார் 10 நிமிடங்களுக்கும் மேலாகிறது. இதுகுறித்து 2007ம் ஆண்டு முதல் போராடி வருகிறோம். ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தற்போது 6 வழிச்சாலை போடும் பணிகள் நடக்கின்றன. எங்கள் கிராமத்துக்கு அருகில் ஏனாத்தூர் பகுதியில் கூட்டுச்சாலையில் சாலையை கடக்க வழி இருந்தது. தற்போது அங்கேயும் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வழிமறிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆபத்தான வகையில் சாலையைக் கடக்க முயன்ற சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், கை, கால்களை இழந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, எங்கள் பகுதியில் சாலையைக் கடக்க சாலையின் இருபுறமும் சிறு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags : National Highway ,Kanchipuram ,Vedal ,
× RELATED சென்னை- பெங்களூரு தேசிய...