×

கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் நடைபாதை கடைகளை அகற்றி பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி, பிப். 20: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி அவர்களுக்கு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கி தரவேண்டும் என கட்டிடம் மற்றும் கடை உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கும்மிடிப்பூண்டியில், கட்டிடம் மற்றும் கடை உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று சங்க தலைவர் ஆர்.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது. இதில், செயலாளர் ஆசிர்வாதம், பொருளாளர் ஆறுமுகசெட்டியார், துணை தலைவர் கோவிந்தன், துணை செயலாளர் கருணாமூர்த்தி, ரெட்டம்பேடு் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.கே.முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜாரில் உள்ள நெடுஞ்சாலையை ஒட்டி கட்டிடங்கள் மற்றும் கடைகளுக்கு முன்னால் சாலையை ஆக்கிரமித்து உள்ள சிறு வியாபாரிகளால் மற்ற கடைகளுக்கு ஏற்படும் இடையூறு குறித்தும், இரு தரப்பினருக்கு அடிக்கடி ஏற்படும் வாக்குவாதங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சாலையோர ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல், குறுகலான சாலை காரணமாக பைபாஸ் சாலை வழியே செல்லும் நிலையில் அனைத்து பேருந்துகளையும் கும்மிடிப்பூண்டி பஜார் வழியே வர செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி பஜாரில் நெடுஞ்சாலை வாகன போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கும்மிடிப்பூண்டி பஜாரில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு கடைகளை முழுமையாக அகற்ற வேண்டும். நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து உள்ள சாலையோர கடைகளுக்கு கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அடையாள அட்டை, உரிமம் வழங்க ஆட்சேபனை தெரிவித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டம் 2014ன் படி நடைபாதை கடைகள் வாழ்வாதாரம் அற்றவர்களுக்கு மட்டுமே என்பதை பேரூராட்சி உறுதி செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் வியாபாரிகள் கமிட்டி அமைத்து அதில் பலதுறை அதிகாரிகள் பொதுமக்கள் அடங்கிய உறுப்பினர்களை சேர்த்து ஆட்சேபனை இல்லாதவர்களுக்கு மட்டுமே நடைபாதை கடைக்காரர்களுக்கான அடையாள அட்டை, உரிமம் வழங்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நடைபாதை கடைக்காரர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு அவர்களுக்கு கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நிரந்தர இடத்தை பேரூராட்சி நிர்வாகம் ஒதுக்க வேண்டும். அப்படி அவர்களுக்கு இடம் ஒதுக்கும்போது கும்மிடிப்பூண்டி கட்டிடம் மற்றும் கடை உரிமையாளர்கள் சங்கத்தினரின் நிதி மூலம் நடைபாதை கடைகாரர்களுக்கு சிமெண்ட் ஷீட் போடப்பட்ட கடைகள் கட்டித் தரப்படும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : walkway shops ,Gummidipoondi Bazaar ,
× RELATED கும்மிடிப்பூண்டி பஜாரில் பூஸ்டர்...