×

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி இஸ்லாமிய இயக்கங்கள் முற்றுகை

விருதுநகர், பிப். 20: விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே ஜமா அத்துல் உலமா சபை தலைமையில் இஸ்லாமிய இயக்கங்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் பல ஆயிரம் பேர் பங்கேற்றதால் பரப்பரப்பு நிலவியது. விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் ஜமா அத்துல் உலமா சபை, விருதுநகர் மாவட்ட அனைத்து மஹல்லா ஜமா அத்துக்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் ஒருங்கிணைந்து சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரி மாவட்ட ஜமா அத்துல் உலமா சபை தலைவர் நஸிர் அஹ்மத் பைஜி தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் வட்டார உலமா சபை தலைவர் ஷாநவாஸ்கான் மஹ்ழரி, வட்டார உலமா சபை பொருளாளர் அஹ்மத் யாசின் பைஜி,பெரிய பள்ளிவாசல் இமாம் ஷேக் மைதீன் பைஜி சிறப்புரையாற்றினர். மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் தேனிவசந்தன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், சுதந்திரத்திற்கு பாடுபட்ட சமுதாயம் வீதிக்கு வந்துள்ளோம். வண்ணாரப்பேட்டையில் அமைதியாக போராட்டம் நடத்திய மக்கள் தண்ணீர் பாட்டில் வீசினர், சாலைமறியல் செய்தாக கூறும் முதல்வர் ஆதாரம் காட்ட முடியுமா. மக்களை பிரிக்க முதல்வர் அவதூறு பரப்பி வருகிறார். மோடிக்கு பயந்து வழக்குப்பதிவு செய்து வருகிறார்.

வங்கதேசத்தில் இருந்து அசாமிற்குள் வந்த 19 லட்சம் பேரில் 7 லட்சம் பேர் முஸ்லீம்கள், 12 லட்சம் பேர் இந்துக்கள் உள்ளனர். இவர்களும் 30 ஆண்டுகளுக்கு முன் வந்தவர்கள். நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் தங்களது பெற்றோர் பிறந்த ஆதாரம் தரவேண்டும். அனைவருக்கும் இல்லாத ஒன்றை பெற அரசு அலுவலங்களில் வரிசையில் நின்று லஞ்சம் தரவேண்டும். அனைத்து மக்களும் இந்த சட்ட திருத்தத்தால் வீதிக்கு வந்து அவதிக்குள்ளாக இருப்பதாக தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில், நீதிக்கான போராட்டம், இந்திய மக்கள் உரிமை காக்கும் மற்றொரு விடுதலை போராட்டம், அரசியல் சாசனம் காப்பாற்ற நடக்கும் முற்றுகை போராட்டம், பாஜக ஆளாத மாநிலங்கள் எல்லாம் எதிர்க்கும்போது தமிழ்நாடு மட்டும் கனலாய் மாறி கொதிக்கிறது. அதிமுக அரசோ விடை இல்லாமல் விழிக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பும் என்பிஆர் ஒன்றல்ல, மத்திய அரசு கழுத்தறுக்க கத்தியை எடுத்து கொடுக்காதே,

ஈழத்தமிழரை வஞ்சிக்கும் சிஏஏவை எதிர்க்காமல் ஈனப்பதவியை பாதுகாத்து எம்ஜிஆர் புகழை கெடுக்காதே, அண்ணா பெயரால் ஆளும் நீங்கள் அண்ணாவுக்கு எதிரான மோடியின் காலைப்பிடிக்காதே, மோடியா, லேடியா என முழக்கமிட்ட அம்மா ஆட்சி என்போரே இந்த கொடுமை தகுமா. என்ஆர்சிக்கான தகவல்களை தரமாட்டோம். சட்டமன்றத்தில் எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு நான்கு வழிச்சாலையில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் எஸ்பி பெருமாள் 500க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Tags : Islamic Movement Siege ,CAA ,NRC ,NPR ,
× RELATED சிஏஏ அமல்படுத்தியதை கண்டித்து திருவாரூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!!