×

தேவாரம் மலையடிவாரத்தில் பராமரிப்பின்றி சேதமடைந்து வரும் தடுப்பணைகள் விவசாயிகள் அதிருப்தி

தேவாரம், பிப்.20: தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் கட்டப்பட்ட தடுப்பணைகள் முறையாக பராமரிப்பு இல்லாததால் சேதம் அடைவதால் தண்ணீர் தேங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தேவாரம் எந்தவிதமான குறிப்பிடத்தக்க நீர்நிலை ஆதாரங்களும் இல்லாத பகுதியாக உள்ளது. மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி அடர்ந்த காடுகள் அதிகமாக உள்ளன. கோம்பை, பண்ணைப்புரம், ராமக்கல்மெட்டு, தே.ரெங்கநாதபுரம் என அனைத்து பகுதிகளுமே மலையடிவாரத்தை ஒட்டியே அமைந்துள்ளன. இதற்கு கீழ்புறமாக பலஆயிரம் ஏக்கர்நிலங்கள் உள்ளன. மழை பெய்தால்மட்டுமே இங்குள்ள நிலங்களில் காட்டுவிவசாயம் நடைபெறும். தக்காளி, எள், நிலக்கடலை, கப்பை என மலையடிவாரநிலங்களில் அதிகமான அளவில் பயிரிடப்படுவது வழக்கமாக இருக்கிறது. மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் நிலத்தடிநீர்மட்டம் உயர்வதற்காக தடுப்பணைகள் அதிகமான அளவில் கட்டப்படுகின்றன. வேளாண்மை பொறியியல்துறை, வனத்துறை, மற்றும் தனியார் தொண்டுநிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கட்டப்படும் சிறிய தடுப்பணைகளால் ஒருபுறம் மழை பெய்யும்போது தண்ணீரும், மறுபுறம் வனத்தில் இருந்து வெளியே வரக்கூடிய காட்டுவிலங்குகள் தண்ணீர் பருகவும் இவை பயன்படுகின்றன.

இவை கட்டும்போது மட்டுமே பராமரிக்கப்படுகின்றன. அதன்பின்பு கண்டுகொள்ளப்படுவதில்லை. இதனால் இவை சில வருடங்களிலேயே உடைந்தும், சிறிய தடுப்பணைகளில் ஓட்டைகள் விழுந்தும் விடுகின்றன. எனவே மலையடிவாரங்களை ஒட்டி உள்ள நிலங்களில் தடுப்பணைகள் கட்டப்படும்போது அதனை பராமரிப்பதற்கென்றே தனியாக கண்காணிப்பு குழுக்களை அமைக்கவேண்டும். இதில் மலையடிவார விவசாயிகள், தன்னார்வதொண்டர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் இடம்பெறுவது அவசியம். ஆனால் எதனையும் செய்யாமல் தடுப்பணைகள் கட்டப்படும்போது இவைகளுக்காக ஒதுக்கப்படும் நிதி வீணாகிறது. இனிவரும் காலங்களிலாவது கட்டப்பட்ட தடுப்பணைகளை பராமரிக்க தேவையான நடவடிக்கை மிகவும் அவசியமாகிறது. இது குறித்து விவசாயிகள் கூறிய புகாரில், தடுப்பணைகள் தற்போது கோடை தொடங்கிடும் முன்பே பராமரிக்கவேண்டும். மலையடிவாரத்தில் பராமரிப்பு இல்லாமல் உடைந்துகிடக்கிறது. எனவே வேளாண்மை பொறியியல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றனர்.

Tags :
× RELATED சீசன் தொடங்கிய நிலையில் மாங்காய்களில் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை